இலங்கை
நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்களின் விபரம்
நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்களின் விபரம்
2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கொழும்பு, மாத்தறை மற்றும் காலியைச் சேர்ந்த மாணவர்கள் பிரதான நான்கு பாடப்பிரிவுகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.
2022 (2023) க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்று மாலை வெளியாகியிருந்தது.
இதன்படி, உயிரியல் விஞ்ஞான பிரிவில் மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தைச் சேர்ந்த பிரமோதி பாஷானி முனசிங்க நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த மனேத் பானுல பெரேரா பௌதீக விஞ்ஞான பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
கொழும்பில் உள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தைச் சேர்ந்த கவிதினி தில்சரணி தருஷிகா வர்த்தகப் பிரிவில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளார்.
அத்துடன் காலி ரிச்மண்ட் கல்லூரியைச் சேர்ந்த சமுதித நயனப்பிரிய பொறியியல் தொழிநுட்ப பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.
இதேவேளை 2022 (2023) ஆண்டில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய விண்ணப்பதாரர்களில் 166,938 பேர் இந்த ஆண்டு பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு தகுதி பெற்றவர்களில் 149,487 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 17,451 தனியார் விண்ணப்பதாரர்களும் உள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.