அரசியல்
மகிந்த தரப்பில் இருந்து களமிறங்கும் ஜனாதிபதி வேட்டபாளர்
மகிந்த தரப்பில் இருந்து களமிறங்கும் ஜனாதிபதி வேட்டபாளர்
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவரையே வேட்பாளராக களமிறக்கவுள்ளதுடன், பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லையென, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்தார்.
பயாகலை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்காகவே நாடாளுமன்றத்தினூடாக இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவை தெரிவு செய்தோம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அரசாங்கத்தை தோற்றுவித்துள்ளதால், எமது கட்சியின் கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாது.
எதிர்வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பாக இதுவரையில் எந்தவிதத் தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.
பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவோம். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கவுள்ளதாக குறிப்பிடப்படும் செய்தி அடிப்படையற்றது.
வாடகைக்கு வேட்பாளரை பெற வேண்டிய தேவை எமக்குக் கிடையாது. எமது கொள்கைகளை முன்னிலைப்படுத்தும் வேட்பாளரை களமிறக்குவோம்.
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள கட்சியின் வருடாந்த மாநாட்டில் முக்கிய அரசியல் தீர்மானங்களை அறிவிப்போம். கட்சியை பலப்படுத்தும் வகையில் பல தீர்மானங்களை தற்போது முன்னெடுத்துள்ளோம்.
மக்கள் மத்தியில் ராஜபக்சவினருக்குள்ள செல்வாக்கை ஒருபோதும் இல்லாதொழிக்க முடியாது. ராஜபக்சவினரை எந்தச் சக்தியாலும் வீழ்த்தவே முடியாது எனத் தெரிவித்துள்ளார்.