இலங்கை
உறவுகள் வடிக்கும் கண்ணீரை எவரும் கொச்சைப்படுத்த முடியாது: அமைச்சர் விஜயதாஸ
உறவுகள் வடிக்கும் கண்ணீரை எவரும் கொச்சைப்படுத்த முடியாது: அமைச்சர் விஜயதாஸ
“காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வலியும் வேதனையும் அரசுக்குத் தெரியும். கொடூர வேதனையில் துடிக்கும் அந்த உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்.” என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நேற்று நீதி கோரி வடக்கு, கிழக்கின் பல்வேறு இடங்களில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
“நீதி அமைச்சர் என்ற ரீதியில் எனது கருத்தை நான் முன்வைத்துளேன்.
தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் என மூவினத்திலும் பலர் காணாமல்போயுள்ளனர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
அந்த உறவுகள் வடிக்கும் கண்ணீரை எந்தத் தரப்பும் கொச்சைப்படுத்த முடியாது.
அவர்களின் உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.” என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை “வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது? இந்தக் கேள்விக்கு இலங்கை அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும். பொறுப்புக்கூறும் இந்த விடயத்தில் இருந்து இலங்கை அரசு தப்பிக்கவே முடியாது என இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகம், இலங்கை அரசை சும்மாவிடாது.”
“இறுதிப் போரில் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது? இராணுவத்தினரிடம் உயிருடன் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? வடக்கிலும் கிழக்கிலும் கடத்தப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது?
கைது செய்யப்பட்டு பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது? இந்தக் கேள்விகளுக்கு இலங்கை அரசு கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி கிடைக்க நாம் தொடர்ந்தும் போராடுவோம்.” என தெரிவித்துள்ளார்.