இலங்கை
இலங்கையில் இனக்கலவரம் மூளலாமென்ற எச்சரிக்கை! அரசாங்கத்தின் பதில்
இலங்கையில் இனக்கலவரம் மூளலாமென்ற எச்சரிக்கை! அரசாங்கத்தின் பதில்
இலங்கையில் இனக்கலவரம் ஏற்படுவது குறித்து அண்மைய நாட்களில் சர்வதேச மற்றும் தேசிய ஊடகங்களின் புலனாய்வுத் துறையை மேற்கோள்காட்டி வெளியாகும் தகவல்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இதனை வினவியுள்ளார்.
மேலும் கூறுகையில், இந்நாட்டில் பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டு இனக்கலவர சூழல் ஏற்படக்கூடும் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயம் என்பதனால் அனைத்து கட்சிகளையும், தரப்புகளையும் உடனடியாக அழைத்து இது உண்மையா பொய்யா என்பதை தெளிவுபடுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலுடன் இந்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு குழப்பம் காரணமாக இந்த உணர்வுபூர்வமான விடயம் தொடர்பில் அரசாங்கமும் நாடாளுமன்றமும் கவனம் செலுத்துவதுடன் இது தொடர்பில் அனைத்து கட்சிகளுக்கும் பொறுப்பான தரப்பினருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் இந்த கேள்விக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் பதிலளிக்கையில், நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் வெளிநாட்டு புலனாய்வு பிரிவினரிடமோ அல்லது நிறுவனத்திடம் இருந்தோ எந்த தகவலும் கிடைக்கவில்லை.
நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் இனவாத கலவரங்கள் தொடர்பாக எந்த வெளிநாட்டு உளவு நிறுவனத்திடமிருந்தும் எங்களுக்கு எந்தத் தகவலும் வரவில்லை. இதை நான் மிகுந்த பொறுப்புடன் கூறுகிறேன்.
வதந்திகளுக்கு எங்களால் எப்போதும் பதிலளிக்க முடியாது. அதனால்தான் இது தொடர்பாக நான் முதலில் நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கிறேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.
குருந்தூர் மலையை அடிப்படையாக வைத்து எவ்வேளையிலும் இனக்கலவரம் மூளலாமென்ற இந்திய புலனாய்வுபிரிவின் எச்சரிக்கையை அலட்சியம் செய்ய வேண்டாமென உள்நாட்டு புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
முல்லைத்தீவு – குருந்தூர்மலையை அடிப்படையாக வைத்து இனக்கலவரத்தை தூண்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தரப்பினர் மற்றும் தனிநபர்கள் குறித்து தகவல்களை திட்டுமாறும் புலனாய்வுத் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.