இலங்கை
தனியார் நிறுவனங்களுக்கு நன்மை இதுவே
தனியார் நிறுவனங்களுக்கு நன்மை இதுவே
பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் உள்ளகக் கடன்மறுசீரமைப்பைத் தவிர்த்து, தமது ஓய்வூதிய நிதியத்தில் 30 சதவீத வரியைச் செலுத்துவதற்கான தெரிவை மேற்கொள்வதற்கே அதிக வாய்ப்பு காணப்படுவதாகவும், அவ்வாறு உயர் வட்டிவீதத்தைச் செலுத்துவது ஓய்வூதிய நிதியத்துக்கும், அதன் அங்கத்தவர்களுக்கும் நன்மையளிக்கும் எனவும் வெரிட்டே ரிசேர்ச் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் நிஷான் டி மெல் தெரிவித்துள்ளார்.
உள்ளகக் கடன்மறுசீரமைப்பு செயற்திட்டம் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், தமது அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீடுகளின்படி, உள்ளகக் கடன்மறுசீரமைப்பை விடுத்து 30 சதவீத வருமானவரி செலுத்துகையைத் தெரிவுசெய்வது ஓய்வூதிய நிதியம் மற்றும் அதன் அங்கத்தவர்களுக்கு உயர் நன்மையளிக்கும் என்று அவர் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘எனவே பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் அதனையே தெரிவுசெய்யுமென நம்புகின்றேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை அரசாங்கம் இதனையொத்த வாய்ப்பை ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களுக்கும் வழங்கவேண்டும் எனவும் நிஷான் டி மெல் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் ‘தற்போது முன்மொழியப்பட்டுள்ள உள்ளகக் கடன்மறுசீரமைப்பு செயற்திட்டத்தின் பிரகாரம், திறைசேரியினால் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு வழங்கப்பட்ட பிணையங்கள் அனைத்தும் மீளப்பெறப்பட்டு, விநியோகிக்கப்படும்போது அதற்குரிய வட்டிவீதக்கொடுப்பனவு 1ஃ3 பங்கால் குறைக்கப்படுகின்றது.
எனவே பிணையங்களுக்கான கொடுப்பனவாக ஊழியர் சேமலாப நிதியத்துக்கு வழங்கப்படும் நிதியில் பெருமளவு கழிப்பனவுகள் இடம்பெறுவதுடன், அது எதிர்வரும் 2038 ஆம் ஆண்டு வரையான 16 வருடகாலத்தில் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு 12 ட்ரில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தும்’ என்றும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login