இலங்கை
தற்போதைய அரசாங்கம் கோட்டாபய ராஜபக்ஷவை பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தாது – யஸ்மின் சூக்கா விசனம்
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்துவரும் தற்போதைய அரசாங்கம், மாத்தளை மனிதப்புதைகுழிகள் மற்றும் இறுதிக்கட்டப்போரின்போது இடம்பெற்ற படுகொலைகளில் கோட்டாபயவின் வகிபாகத்துக்காக அவரைப் பொறுப்புக்கூறச்செய்யாது என்று சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம், இலங்கையில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள், காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம் மற்றும் மனித உரிமைகள், அபிவிருத்தி நிலையம் ஆகிய 4 அமைப்புக்களும் ஒன்றிணைந்து ‘இலங்கையிலுள்ள பாரிய மனிதப்புதைகுழிகளும், வெற்றியடையாத அகழ்வுப்பணிகளும்’ என்ற தலைப்பில் கடந்த வாரம் விரிவான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.
அவ்வறிக்கையில் செம்மணி, மாத்தளை, மன்னார், சூரியகந்த உள்ளடங்கலாக நாட்டின் பல்வேறு பாகங்களிலும் உள்ள மனிதப்புதைகுழிகள் குறித்தும், அவற்றை அகழ்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மற்றும் அதன்போது ஏற்பட்ட தடைகள் என்பன பற்றியும் விரிவாக ஆராய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மாத்தளை மனிதப்புதைகுழி அகழ்வின்Nhபது முன்னாள் பாதுகாப்புச்செயலாளரும் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்ட தலையீடுகள் பற்றிய அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் அவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இவ்வாறானதொரு பின்னணியில் அவ்வறிக்கையைத் தயாரிப்பதில் முன்னின்று செயற்பட்ட அமைப்பான சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா இலங்கையிலுள்ள மனிதப்புதைகுழிகள் மற்றும் அதுசார்ந்த பொறுப்புக்கூறல் தொடர்பில் மேலும் கூறியிருப்பதாவது:
இலங்கையிலுள்ள பாரிய மனிதப்புதைகுழிகள் தொடர்பான அறிக்கையானது போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான மிகமோசமான மீறல்கள் மற்றும் அதற்கு முன்னர் மாத்தளை மாவட்டத்துக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரியாக கோட்டாபய ராஜபக்ஷ பணியாற்றிய காலப்பகுதியில் இடம்பெற்ற ஜே.வி.பி படுகொலைகள் என்பன தொடர்பில் தண்டனைகளிலிருந்து விலக்கீடு பெறும் போக்கு தொடர்வது பற்றித் தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கின்றது.
அப்போதிருந்து கோட்டாபய ராஜபக்ஷவோ அல்லது ஜே.வி.பி கால படுகொலைகள் மற்றும் இறுதிக்கட்டப்போரின்போது இடம்பெற்ற படுகொலைகளுடன் தொடர்புடைய ஏனைய அதிகாரிகளோ இன்னமும் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவில்லை.
தற்போதைய அரசாங்கம் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்துவரும் நிலையில், அவ்வரசாங்கம் மாத்தளை படுகொலைகளிலோ அல்லது கடந்த 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட போரின்போது இடம்பெற்ற படுகொலைகளிலோ கோட்டாபய ராஜபக்ஷவின் வகிபாகத்துக்காக அவரைப் பொறுப்புக்கூறச்செய்யாது என்று தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login