இலங்கை
286 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடு நீக்கம்!
நாட்டில் 286 பொருட்களின் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனால் எந்தப் பிரச்சினையும் வராது என நம்புகிறோம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
செலவழிக்க வேண்டிய டொலர்களின் அளவு
இதன்போது, சுமார் 286 பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் மீண்டும் தளர்த்தப்பட்டுள்ளன, மேலும் அனைத்துக் கட்டுப்பாடுகளும் படிப்படியாக முடிவுக்கு வர உள்ளன. இது நமது அந்நியச் செலாவணி கையிருப்பை கடுமையாகப் பாதித்து மேலும் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுக்குமா? என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த நிதி இராஜாங்க அமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
இதை நாங்கள் மிகவும் கவனமாகச் செய்து வருகின்றோம். இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருவாயை அதிகரிக்க வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமெனத் துறைசார் மேற்பார்வைக் குழுவொன்றில் கூறப்பட்டிருப்பதை ஊடகங்களில் காணக்கூடியதாகவிருந்தது.
இருப்பினும், இதுபோன்ற கோரிக்கைகளுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். அந்த 286 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சிப் பிரிவு மற்றும் நாட்டின் தேவைகள் உட்பட ஒவ்வொரு துறையையும் கலந்தாலோசித்து, கடந்த ஐந்தாண்டுகளின் பதிவேடுகளைப் பார்த்து ஆண்டுக்கு செலவழிக்க வேண்டிய டொலர்களின் அளவையும் மதிப்பீடு செய்தோம்.
அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு, 286 பொருட்களின் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனால் எந்தப் பிரச்சினையும் வராது என நம்புகிறோம் என தெரிவித்தார்.
You must be logged in to post a comment Login