இலங்கை
அமைச்சு பதவியை துறக்கத் தயார்-கெஹலிய
சுகாதார அமைச்சுப் பதவியில் தொடர்ந்தும் நிலைத்திருப்பது குறித்து தனக்குள் அதிருப்தி இருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்குப் போதுமான நிதி கிடைக்கவில்லை என்றால், அமைச்சுப் பதவியில் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கான எதிர்பார்ப்புகள் இல்லை என்றும் கெஹலிய ரம்புக்வெல்ல நாடாளுமன்றத்தில் இன்று (22.06.2023) வலியுறுத்தியுள்ளார்.
மருந்துப் பற்றாக்குறை தொடர்பாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கான நிதியைப் பெற்றுக் கொள்வதில் தொடர்ந்தும் சிக்கல் உள்ளது. நாங்கள் அது பற்றி இன்று பதில் நிதியமைச்சருடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளோம்.
மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான நிதியைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இல்லையெனில் அதனை இந்த சபைக்கு அறிவிப்பேன். அப்படியான நிலையில் பதவியில் தொடர்ந்தும் நிலைத்திருக்க மாட்டேன். அது சமூகத்திற்கும் மருத்துவத்துறைக்கும் செய்யும் மிகப் பெரும் தவறாகும்.
ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. மருந்து கொள்வனவுக்கான செயல்பாட்டின் சிக்கல்கள் உள்ளன. கொள்முதல் செயல்முறையின் காலம் பற்றிய பிரச்சினை ஒன்றும் உள்ளது.
நீதிமன்றம் தொடர்பில் எங்களுக்கு மரியாதை உள்ளது. ஆனால், சில தீர்ப்புகள் எங்களுக்கு எதிராக உள்ளன. அதைப் பற்றி வருத்தம் கொள்கின்றேன். நீதி அமைச்சருடன் அது குறித்து கலந்துரையாடல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்றும் கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்ந்தும் தெரிவித்துள்ளாா்.
You must be logged in to post a comment Login