அரசியல்
மருந்துத் தட்டுப்பாட்டிற்கு தீர்வின்றேல் பதவி விலகுவேன் : அமைச்சர் கெஹலிய!
நாட்டில் ஏற்பட்டிருக்கும் மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாட்டை சரி செய்ய நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் முறையான தீர்வு கிடைக்காவிட்டால் பதவி விலகப் போவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
நாட்டில் மருந்து பொருட்களுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மருந்து பொருட்கள் கொண்டுவரும் நடவடிக்கை தொடர்பாக 9 மாதமளவில் பெறுகை கோரல் தொடர்பில் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.
அதனை குறைத்துக்கொள்ள அமைச்சரவைக்கும் பல சந்தர்ப்பங்களில் சென்றோம். அமைச்சரவையும் அதற்கு அனுமதி வழங்கி இருந்தது.
அதற்கிடையில் ஒருசில குழுவினர் இவ்வாறு மருந்து பொருட்கள் கொண்டுவருவதை நிறுத்துமாறு உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். அதனால் எமக்கு பாதிப்பு ஏற்பட்டது.
சுகாதாரத்துறை தொடர்பாக நீதிமன்றத்தின் சில தீர்ப்பு எமக்கு பாதகமாக அமைந்திருக்கிறது. இது தொடர்பாக நீதி அமைச்சருக்கும் எமது கவலையை தெரிவித்திருக்கிறோம். மருந்து தட்டுப்பாட்டுக்கு இதுவும் ஒரு காரணமாகும்.
அடுத்த விடயம் நிதி தொடர்பாகவும் எமக்கு பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. சுகாதார துறைக்கு போதுமான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றே நாங்கள் கேட்கிறோம்.
அதனால் இதுதொடர்பாக இன்று பதில் நிதி அமைச்சுடன் கலந்துரையாடல் ஒன்று இருக்கிறது. கலந்துரையாடலில் எமக்கு சரியான முடிவு கிடைக்காவிட்டால் அது தொடர்பாக இந்த சபைக்கு அறிவிப்பேன்.
அத்துடன் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்றவகையில், நாட்டில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் போது அதற்கு பதில் சொல்லவேண்டும்.
அதனால் நிதி அமைச்சில் இடம்பெற்றும் கலந்துரையாடலின் மூலம் மருந்துபொருட்களுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாட்டை சரி செய்துகொள்ள முடியாமல் போனால் தொடர்ந்தும் இந்த பதவியில் இருப்பதற்கு எதிர்பார்க்க மாட்டேன்.
ஏனெனில் இது சமுதாயத்திற்கும் இந்த சேவைக்கும் ஒரு பெரிய குறைபாடு. காரணங்கள் எதுவாக இருந்தாலும், அந்த குறைபாடுகளுக்கு நாம் பொறுப்பேற்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login