அரசியல்
காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத செயல்களை ஊடகங்கள் மறைந்துவிட்டன! – அமைச்சர் பந்துல குற்றச்சாட்டு
மூர்க்கமான காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத செயல்கள் அரசுக்கு எதிரான போராட்டம் என்ற போர்வையில் செய்யப்பட்டதை உள்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டத் தவறி விட்டன என வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தெரிவித்துள்ளார்.
அப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கத்தின் மீதும் அரசியல் தலைவர்களுக்கு எதிராகவும் , அரசியல் ரீதியில் தூண்டிவிடப்பட்ட சிலரால் நடாத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான செயலே அந்தப் போராட்டமாகும். அந்தத் தாக்குதலின் போது ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கொடூரமாக கொல்லப்பட்டார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 72 அங்கத்தவர்களின் சொந்த வீடுகள் மற்றும் சொத்துகள் எரிக்கப்பட்டன. பொதுஜன பெரமுனவின் 800 ஆதரவாளர்கள் உடல் ரீதியான தாக்குதலுக்கு ஆளாகினர். இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட வன்முறை. தன்னிச்சையாக நடந்த ஒன்றல்ல.
1989 – 90 காலப்பகுதியில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றிய அனுபவம் மிக்கவர்களால் இந்த வன்முறைகளும் கண்காணிக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஆகிய ஊடகத்துறை இவ்வாறான அட்டூழியங்களையும் கொடூரங்களையும் அடிக்கோடிட்டு காட்ட தவறி விட்டது. இந்த விடயத்தில் ஊடகங்களின் பங்களிப்பு திருப்திகரமானதாக இல்லை.
கடந்த வருடம் மே 9 ஆம் திகதி தீவிர வன்முறையில் ஈடுபட்டவர்கள் வென்றிருந்தால் அன்று இந்நாட்டின் ஜனநாயகத்தோடு சேர்த்து ஊடகத்துறையும் முடிவுக்கு வந்திருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அரசாங்கத்தை நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் விமர்சிக்கும் அளவிற்கு அரசாங்கம் ஊடகத்திற்கு சுதந்திரம் அளித்துள்ளது என ‘சர்வதேச ஊடக சுதந்திர தினம்’ தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட போது அமைச்சர் தெரிவித்தார்.
You must be logged in to post a comment Login