அரசியல்
ஜனாதிபதியை தனித்து சந்திக்கிறது கூட்டமைப்பு!
ஜனாதிபதியை தனித்து சந்திக்கிறது கூட்டமைப்பு!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பிற்கு அமைய, இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி கொழும்பி சந்தித்து கலந்துரையாடவுள்ளது. ஜனாதிபதியின் அழைப்பின்பேரில் இடம்பெறும் இச்சந்திப்பின்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து விரிவாக ஆராயப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
நாம் முன்னோக்கிப் பயணிக்கவேண்டுமாயின் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணவேண்டும். இனப்பிரச்சினை விடயத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் தூரமாகிச்செல்வதால் எந்தப் பயனுமில்லை. இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணவேண்டுமாயின், அனைத்துத்தரப்பினரும் பாராளுமன்றத்துக்குள்ளே ஒரே அரசாங்கமாகச் செயற்படவேண்டும் என்று கடந்த முதலாம் திகதி ஐக்கிய தேசியக்கட்சியின் மேதினக்கூட்டத்தில் ஆற்றிய உரையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியிருந்தார்.
இருப்பினும் இதுகுறித்து அவ்வேளையில் கருத்து வெளியிட்டிருந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், இனப்பிரச்சினைக்கான தீர்வு வழங்கல் குறித்து அண்மையகாலங்களில் ஜனாதிபதியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்துக்கூட்டங்களிலும் நாம் பங்கேற்றிருந்ததாகவும், அதனை முன்னிறுத்திய ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் சகல ஒத்துழைப்புக்களையும் வழங்கியிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அதுமாத்திரமன்றி இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்குவதாக வெறுமனே கூறுவதைவிடுத்து, அதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி உடனடியாக எடுக்கவேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த வாரம் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் கலந்துரையாடிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அனைத்துத் தமிழ்க்கட்சிகளையும் சந்திப்பதற்கு முன்னர் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பைத் தனியாக சந்திக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
அதன்படி எதிர்வரும் செவ்வாய்கிழமை (9) பி.ப 3 மணியளவில் ஜனாதிபதிக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இச்சந்திப்பில் தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவும் கலந்துகொள்வார்.
அதேவேளை ஜனாதிபதியுடனான இச்சந்திப்புக் குறித்து ஆராயும் நோக்கில் நாளை திங்கட்கிழமை (8) மாலை 6 மணியளவில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
இச்சந்திப்பின்போது ஜனாதிபதியுடனான சந்திப்பு மற்றும் அதில் வலியுறுத்தப்படவேண்டிய விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டாகவும் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பு எதிர்வரும் 11 ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்திப்பின் போது வடக்கு கிழக்கு காணி விடுவிப்பு விவகாரங்கள் மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.எ சுமந்திரன் தெரிவித்தார்.
அதேபோல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தனித்து சந்திக்க ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு குறித்து கருத்து தெரிவித்த சுமந்திரன், இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படும் விடயங்கள் குறித்து ஜனாதிபதி செயலகம் இன்னமும் அறிவிக்கவில்லை. எனினும் நிகழ்கால அரசியல் செயற்பாடுகள் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் குறித்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்வதற்கான கலந்துரையாடலாக இது அமையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் கிடையில் இதற்கு முன்னர் நான்கு சந்திப்புகள் உத்தியோகபூர்வமாக இடம்பெற்றிருந்த போதிலும் இந்த சந்திப்புகளில் தமிழர் பகுதிகளின் பிரச்சினைகள் குறித்து பெரியளவில் கலந்துரையாடப் பட்டவில்லை என்பதுடன், பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
#srilankaNews
You must be logged in to post a comment Login