இலங்கை
தொழிலாளர் அடக்குமுறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்!
இம்முறை தொழிலாளர் தினத்தில் இருந்து தொழிலாளர்களுக்குரிய சம்பளங்கள் அதிகரிக்கப்பட்டு வழங்கப்பட வேண்டும் என்பதுடன் அவ்வாறு இல்லாத பட்சத்தில் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலைமை தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தமிழ் கட்சிகள் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுவதன் மூலம் சாதாரண தொழிலாளர்களுக்கும் நாள் கூலிகளுக்குமே பாதிப்பு ஏற்படுகின்றது. மே தினத்தில் தொழிலாளர்களுக்காக குரல் கொடுப்பதற்காக தமிழ் கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும் – என்றார்.
இதேவேளை, சிவாஜிலிங்கம் தொடர்பாக தெரிவிக்கையில்,
அரச புலனாய்வு நிகழ்ச்சி நிரலின்படி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு அவதூறு பரப்பும் வகையிலான விடயங்கள் சமூக ஊடகங்கள் ஊடாக சில நபர்கள் முன்னெடுக்கப்படுகின்றது. இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தியாகதீபம் திலீபனை நினைவுகூர்ந்ததற்காக சிவாஜிலிங்கத்திற்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிராக எந்த ஒரு தமிழ் கட்சியும் குரல் கொடுக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயம் – என்றார்.
போதைப்பொருள் பாவனை தொடர்பாக கருத்து வெளியிடுகையில்,
வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. வடக்கில் போதைப்பொருள் விற்பனை செய்பவர்களுக்கு ஆதரவாக வடக்கில் உள்ள சட்டத்தரணிகள் ஆஜராகக்கூடாது. அவர்களை பாதுகாக்கும் செயற்பாட்டில் ஈடுபடவும் கூடாது – என்றார்.
மேலும், அண்மைக்காலமாக தீவகத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. தீவகத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. வெளிநாடுகளில் இருந்து நாடு கடத்தப்படுகின்றவர்களின் பின்னணி தொடர்பாக ஆராயப்பட்டு அவர்கள் தொடர் கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்பட வேண்டும். அவ்வாறு இடம்பெறுமாக இருந்தால் இவ்வாறான வன்முறை சம்பவங்களை தடுக்க முடியும் – என்றார்.
You must be logged in to post a comment Login