அரசியல்
பாராளுமன்றினுள் புலி! – முற்றிய வாக்குவாதம்
பாராளுமன்றினுள் புலி! – முற்றிய வாக்குவாதம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனை ”புலி”என்று அமைச்சர் மனுஷ நாணயக்கார கூறியதால் சபையில் கடும் சர்ச்சை ஏற்பட்டது.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (25) வாய்மூல விடைக்கான வினா நேரம் இடம்பெற்றபோது, போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார்.
அதன்போது, சாணக்கியன் எம்.பி, கேள்வி எழுப்ப முயன்றபோது நேரம் போதாது என்று கூறிய பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ அனுமதி மறுத்தை அடுத்து, இரு நிமிடங்கள் தருமாறு சாணக்கியன் எம்.பி. வலியுறுத்தவே சுருக்கமாக கேள்வியை கேட்குமாறு பிரதி சபாநாயகர் அனுமதி வழங்கினார்.
“கிழக்கு மாகாண ஆளுநர் ஓர் இனவாதி, கிழக்கு மாகாண சிங்களவர்களின் பாதுகாவலாராகவே அவர் தன்னை நினைத்துக் கொண்டிருக்கின்றார். ஒருதலை பட்சமாக செயற்படுகிறார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முறையான அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுவதில்லை. இந்த பிரச்சினைக்கு தீர்வு என்ன?”என்று சாணக்கியன் எம்.பி கேள்வியெழுப்பினார்.
அப்போது நேரம் முடிவடைந்து விட்டதாக பிரதி சாபாநாயகர் கூறிய நிலையில், “காலையிலிருந்து அனைவருக்கும் நேரத்தை தாராளமாக வழங்குகின்றீர்கள், ஆனால் தமிழன், கிழக்கு மாகாணத்தவன் என்பதனால் எனக்கு அனுமதி மறுக்கின்றீர்கள்” என்று சாணக்கியன் எம்.பி. தெரிவித்தார்.
இதனையடுத்து, பிரதி சபாநாயகருக்கு சாணக்கியனுக்குமிடையில் தர்க்கம் ஏற்பட்டது. இதன்போது “என்னை நீங்கள் உரத்துப்பேசுவதன் மூலமாகவோ அச்சுறுத்தியோ அடிபணியவைக்க முடியாது” என்று பிரதி சபாநாயகர் அடுத்த கேள்விக்கு சென்றார்.
எனினும் சாணக்கியன் எம்.பி. விடாப்பிடியாக கேள்வி கேட்க வேண்டும் என கூச்சலிடவே, “அமைச்சர் பந்துல இணங்கினால் மட்டும் தான் உங்கள் கேள்விக்கு அனுமதி வழங்கப்படும்“ என்று பிரதி சபாநாயகர் தெரித்த நிலையில், சாணக்கியனின் கேள்விக்கு பதிலளிக்க முடியாது என்று அமைச்சர் பந்துல மறுத்தார்.
இந்நிலையில் அடுத்த கேள்விக்கு அமைச்சர் மனுஷ நாணயக்கார பதிலளிக்க முற்பட்டபோது சாணக்கியன் எம்.பி. தொடர்ந்தும் கூச்சலிட்டுக் கொண்டிருந்ததால் அமைச்சர் மனுஷவுக்கும் சாணக்கியனுக்குமிடையில் தர்க்கம் ஏற்பட்டது.
சாணக்கியனைப் பார்த்தது “நீங்கள்தான் இனவாதி. நாம் வடக்கு, கிழக்கு என்று பிரித்துப் பார்ப்பதில்லை. நீங்கள்தான் நான் கிழக்கு மாகாணத்தவன் என இனவாதம் பேசுகின்றீர்கள். புலி வெளியே பாய்ந்து விட்டது. புலியின் உண்மை முகம் வெளிப்படுகின்றது. பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உங்களைப் போன்றவர்கள்தான் தடையாக இருக்கின்றார்கள் வாயை மூடிக்கொண்டிருங்கள்” என அமைச்சர் மனுஷ கூறினார்.
இதன்போது எழுந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் எம்.பி.யான எம்.ஏ .சுமந்திரன் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பினார்.
அதில்“சாணக்கியன் எம்.பி.யை அமைச்சர் மனுஷ நாணயக்கார புலி என்கின்றார். மாவட்ட ரீதியான பிரச்சினைகளை சபையில் எடுத்துரைக்கும் போது புலிகள் என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. “புலிகளுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை” பாராளுமன்றத்தில் உரையாற்றும் வழிமுறைகளை ஆளும் தரப்பு அமைச்சர் கற்றுக்கொள்ள வேண்டும். சாணக்கியனை புலி என்று அவர் கூறுவதனை நீங்கள் அனுமதிக்கின்றீர்களா?” எனக்கேட்டார்.
இதன்போது எழுந்த சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அமைச்சர் ஆற்றிய உரையில் புலி என்ற சொற்பதம் குறிப்பிடப்பட்டிருக்குமாயின் அதனை ஹென்சாட்டில் இருந்து நீக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்ததை அடுத்து, அவ்வாறான வார்த்தைப்பிரயோகத்தை ஹன்சாட்டிலிருந்து நீக்குமாறு பிரதி சபாநாயகர் தெரிவித்தார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login