அரசியல்
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி கைது!!


தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா வவுனியா பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டார்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உண்மைநிலையினை வலியுறுத்துமாறு கோரி அவர்கள் போராட்டம் மேற்கொண்டுவரும் கொட்டகைக்கு சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தினை பெற்றனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த குறித்த சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார்
நாம் கடந்த 2210 நாட்களாக குறித்த கொட்டகையிலேயே போராடிவருகின்றோம். அந்த கொட்டகைப்பகுதியில் இருந்த மின்சாரதூணில் இருந்து வீதி மின்விளக்கு ஒன்று பொருத்தப்பட்டிருந்தது. அதிலிருந்து எமக்கான மின்சாரம் மின்சாரசபையால் வழங்கப்பட்டிருந்தது.
வடமாகாணசபை செயற்பாட்டில் இருக்கும் போது அது வழங்கப்பட்டிருந்தது. அதில் பழுதுகள் ஏற்ப்பட்டபோதும் கூட இலங்கை மின்சாரசபையினை சேர்ந்தவர்கள் வருகைதந்து அதனை சீரமைத்தும் தந்திருந்தனர். இந்நிலையில் தற்போது கைதுசெய்துள்ளமையை ஏற்றுக்கொள்ளமுடியாது.நாம் சட்டவிரோதமாக மின்சாரத்தை பெறவில்லை. எமது போராட்டத்தினை திசைதிருப்புவதற்காகவே இவ்வாறான சட்டங்கள் பிரயோகிக்கப்படுகின்றது என்றார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் தோ்தல் பிரசார துண்டு பிரசுரத்தில் தனது மகள் உள்ளதாக கூறிய பெண்ணான காசிப்பிள்ளை ஜெயவனிதாவே இவ்வாறு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login