அரசியல்
ஐதேக தலைமையில் மாபெரும் கூட்டணி!!
ஐக்கிய தேசியக் கட்சியை பிளவுபடுத்தியவர்கள் பிழைக்க மாட்டார்கள் என்று கணித்திருந்ததாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, ஐக்கிய தேசியக் கட்சி மாபெரும் அரசியல் கூட்டணியை அமைக்கும் என்ற அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் கருத்தை உறுதிப்படுத்தினார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தி பல அணிகளாக பிளவுபட்டுள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக கூறிய அவர், ராஜித குழு, பொன்சேகா குழு மற்றும் சமீபத்தில் மயந்த குழு என பிளவுபட்டுள்ளதாகவும் முடிந்தால் இந்த குழுக்களை ஒன்றிணைத்து காட்டுமாறு சஜித் பிரேமதாஸவுக்கு சவால் விடுவதாகவும் குறிப்பிட்டார்.
எதிர்வரும் காலங்களில் ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த எம்.பிக்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் மாபெரும் கூட்டணியில் இணையவுள்ளதாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ அண்மையில் பதுளையில் தெரிவித்த கருத்தையும் ரங்கே எம்.பி உறுதிப்படுத்தினார்.
அரசாங்க நிதி தொடர்பான பாராளுமன்ற தெரிவுக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு, அக்கட்சியின் எம்.பியான மயந்த திஸாநாயக்கவுக்கு மற்றுமொரு சிரேஷ்ட எம்.பி ஊடாககட்சித் தலைமை அழுத்தம் கொடுத்துள்ளதாக ரங்கே பண்டார சுட்டிக்காட்டினார்.
குறித்த குழுவின் முன்னாள் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை மீண்டும் அப்பதவிக்கு நியமிப்பதை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முதலில் தடுக்க விரும்பினார் என்றும்
ஹர்ஷ சில்வாவை மகிழ்விப்பதற்காகவே அவர் திஸாநாயக்கவை பதவி விலகுமாறு கூறியிருந்தார் என்றும் ரங்கே எம்.பி சுட்டிக்காட்டினார்.
சில்வா மற்றும் திஸாநாயக்க ஆகிய இருவரையும் பிரேமதாசவால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று தெரிகிறது என்றும் ஐக்கிய மக்கள் சக்தி பல பிரிவுகளாக பிளவுபட்டுள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login