அரசியல்
இன்று கறுப்பு நாள்!!
ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதியின் காலக்கெடு நாளையுடன் முடிவடைவதால், அனைத்து மக்களையும் இன்றைய தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ்ப்பாணம் – பலாலியில் இடம்பெற்ற காணி விடுவிப்பு நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எம்.ஏ. சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்றைக்கு பலாலி விமான நிலையத்தை சுற்றி இருக்கின்ற பகுதிகளில் தொடர்ச்சியாக இராணுவம் கையகப்படுத்திய காணிகளில் இருந்து 108 ஏக்கர் நிலப்பரப்பு பொதுமக்களிடம் கையளிக்கப்படுகிறது.
இதில் 80 ஏக்கர் இராணுவத்தினாலும், 28 ஏக்கர் கடற்படையாலும் விடுவிக்கப்படுகிறது. கடற்படை 30 ஏக்கர் விடுவிப்பதாக இருந்தது ஆனால் அதில் இரண்டு ஏக்கரை தவிர்த்து 28 ஏக்கர் விடுவிப்பதாக சொல்லப்படுகிறது. அந்த இரண்டு ஏக்கரை இப்போது அளக்கின்றார்கள் என்றும் செய்தி வந்திருக்கின்றது.
இந்த விடுவிப்பானது இப்போது புதிய அரசாங்கம் வந்த பிறகு ஜனாதிபதியினால் செய்யப்படுகின்ற விடிவிப்பு அல்ல இது சென்ற ஆட்சி காலத்தில் இதே ஜனாதிபதி பிரதமராக இருந்தபோது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினுடைய காலத்தில் விடுவிப்பதற்கென்று இராணுவம் இங்கே இருந்து அகன்ற நிலப்பரப்பு மட்டும் தான் இப்போது விடுவிக்கப்படுகிறது.
அந்த வேளையில் இராணுவம் இப்படியான கடிதங்களை மக்களுக்கு வழங்கி இருந்தார்கள் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் திகதியிடப்பட்ட கடிதம் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்த இடங்கள் தான் இப்போது மக்களிடத்தில் கையளிக்கப்படுகிறதே தவிர மேலதிகமாக, புதிதாக எந்த நிலமும் விடுவிக்கப்படவில்லை.
2019 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை இது விடுவிக்கப்படாததற்கு என்ன காரணம் என்று எங்களுக்கு தெரியாது ஆனாலும் தான் பிரதமராக இருந்தபோது விடுவிப்பதாக உறுதி அளித்து இருந்த நிலங்களை இப்போது மக்களிடத்தில் கொடுப்பதற்கு ஜனாதிபதி முன் வந்திருக்கின்றார்.
மக்களுடைய நிலங்களை திரும்ப மக்களுக்கு கையளிப்போம் என்று சொன்ன ஜனாதிபதியின் வாக்குறுதி இன்னமும் நிறைவேற்றப்படாமல் தான் இருக்கிறது. நவம்பர் நடுப்பகுதியில் வவுனியாவில் வைத்து அந்த வாக்குறுதியை கொடுத்திருந்தார். பின்னர் நவம்பர் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அந்த வாக்குறுதியை கொடுத்தார், டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி சர்வ காட்சிகள் கூட்டத்திலே அந்த வாக்குறுதியை கொடுத்தார். அதைத்தொடர்ந்து நான்கு கூட்டங்கள் தமிழ் தரப்போடு நடத்தப்பட்டது அதிலும் தொடர்ச்சியாக அந்த வாக்குறுதிகளை கொடுத்தார் இறுதியாக ஜனவரி மாதம் 26 ஆம் திகதி நடந்த சர்வகட்சி கூட்டத்திலும் இதே வாக்குறுதியை கொடுத்தார். ஆனால் இன்னமும் அவர் சொன்னது நிறைவேற்றப்படவில்லை.
இது மட்டுமல்ல, இது டிசம்பர் 13 ஆம் திகதி நாங்கள் ஜனாதிபதிக்கு சொன்ன மூன்று விடயங்களிலே ஒன்று மற்றயது அரசியலமைப்பில் இருக்கின்ற அதிகாரப்பகிர்வு சம்பந்தமான அனைத்து விடயங்களும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது, அதை சொல்லிக் கொண்டிருக்கிறார் இன்னமும் அது செய்யப்படவில்லை.
மூன்றாவது இனப்பிரச்சனைக்கான முழுமையான தீர்வு அதையும் அவர் தானாகவே தான் சொல்லி இருந்தார் பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்னதாக இலங்கை சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு நிறைவடைவதற்கு முன்னதாக இதனை நாங்கள் தீர்த்து வைப்போம் என்று வாக்குறுதியை பல தடவைகள் பாராளுமன்றத்திலும் அவர் சொல்லி இருந்தார்.
நாளைக்கு அந்த காலக்கெடு முடிவடைகிறது அதைக் குறித்த எந்த நடவடிக்கையும் நாங்கள் காண முடியாது இருக்கிறது. ஆகவே ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதி முற்று முழுதாக மீறப்பட்டிருக்கின்றது.
நாங்கள் அந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட ஆரம்பித்த போது பலர் எங்களுக்குச் சொன்ன விடயம் தெரிந்து கொண்டே ஏமாற்றுகிறார்கள் நீங்கள் ஏமாறுகின்றீர்கள் என்று நாங்கள் ஏமாறவில்லை நாங்கள் பேச்சுவார்த்தைக்கு போயிருக்காவிட்டால், நாங்கள் அந்த கூட்டங்களில் கலந்து கொண்டு இருக்காவிட்டால், இதை விடுவிக்காமல் விடுவதற்கும் தீர்வு கொடுக்காமல் விடுவதற்கும் எங்களை சாட்டாக சொல்லு இருப்பார்கள்.
அப்படி எங்கள் மீது பழி போடாமல் இருப்பதற்காக நாங்கள் அனைத்து விடயங்களிலும் முழுமையாக ஈடுபட்டோம் எங்களுடைய முழு ஆதரவையும் அதற்கு கொடுத்தோம் ஆனால் எதுவும் நிறைவேறவில்லை, ஆனபடியினால்தான் நாளைய தினம் தமிழருக்கு கருப்பு நாள். தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்த நாட்டில் எந்த மக்களுக்கும் உண்மையாகவே சுதந்திரம் கிடைக்கவில்லை. என்பதை வலியுறுத்தி கருப்பு நாளாக நாளை அனுஷ்டிக்கப்படுகிறது.
பொருளாதாரத்தில் நாடு வங்குரோத்து அடைந்திருக்கின்றது ஆகவே இது ஒரு கருப்பு நாள்.
75 ஆண்டுகள் நீங்கள் சுயமாக ஆட்சி செய்யுங்கள் என்று எங்களுடைய கையிலே கொடுத்துச் சென்ற பிறகு நாட்டை வங்கரோத்து நிலைக்கு ஆட்சியாளர்கள் தள்ளி இருக்கின்றார்கள். ஆகவே 75 கடந்து விட்டோம் என்று எண்ணிக்கையிலே பூரிப்படைய முடியாது.
தோற்றுப்போன நாடாக இனங்களுக்கு இடையே நல்லுறவை பேண முடியாத நாடாக, பொருளாதாரத்தில் வங்குரோத்து அடைந்த நாடாகத்தான் நாளைக்கு 75 வது சுதந்திர தினம் என்று ஜனாதிபதி பெருமளவு செலவு செய்து நாடு வங்குரோத்தாக இருக்கின்ற போது மிகப்பெரிய செலவீனத்தோடு ஒரு கொண்டாட்டத்தை கொழும்பு காலிமுகத்திடலில் நடத்துகின்றார். அதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக நாங்கள் கறுப்பு நாளாக நாளைக்கு அனுஸ்டிக்கின்றோம். அனைத்து மக்களையும் நாளைய தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டிக்கு மாறு கேட்டுக் கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login