இலங்கை
மின்வெட்டு இல்லை


இலங்கை மின்சார சபை உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு மனு மீதான பரிசீலனை நிறைவடையும் வரை, மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை உயர் நீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை (02) உறுதியளித்தது.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, யசந்த கோத்தாகொட, ஷிரான் குணரட்ன ஆகியோர் முன்னிலையில் இந்த மனு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இலங்கை மின்சார சபையின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி உதித இஹலஹேவா இந்த உ றுதிமொழியை வழங்கினார்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், இலங்கை மின்சார சபையின் தலைவர், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை திங்கட்கிழமை (30) தாக்கல் செய்தது.
1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் சரத்துகளின் கீழ் இலங்கை மின்சார சபையின் தலைவர் அவமதிப்பு குற்றத்தில் குற்றவாளி என்று ஆணைக்குழு சுட்டிக்காட்டியது.
மேற்குறிப்பிடப்பட்ட மூவரும் உயர்தர பரீட்சைக் காலத்தில் தொடர் மின் விநியோகம் வழங்கும் வகையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்பித்த உடன்படிக்கைக்கு இணங்கத் தவறியதாக ஆணைக்குழு மனுவில் சுட்டிக்காட்டியுள்ளது.
உடன்படிக்கைக்கு வந்த பின்னர், இலங்கை மின்சார சபை வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் வகையில் தீர்வைப் புறக்கணித்து மின்வெட்டைத் தொடர்ந்ததாக ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.
பரீட்சை காலத்தில் தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கு மின்சாரசபையின் அப்பட்டமான அலட்சியம் மாணவர்களின் கல்வி உரிமையை மீறும் செயலாகும் என்று ஆணைக்குழு கருதுகிறது.
மின்சாரத்தை வழங்குவதற்கு ஏனைய அர்த்தமுள்ள வழிகள் இருப்பதாக ஆணைக்குழுவின் முன் ஒப்புக்கொண்டு அதன் அடிப்படையில் தீர்வு காணப்பட்ட போதிலும் மின்சாரசபை உத்தரவாதத்தை புறக்கணித்து மின்வெட்டுகளை முன்னெடுத்ததாக ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.