இலங்கை
ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் சுதந்திரதினம்


தேசிய மற்றும் மத ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் 75 ஆவது சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
“ஒன்றாக எழுவோம்” என்ற தொனிப்பொருளில், 75 ஆவது சுதந்திர தின நிகழ்வை 2023 பெப்ரவரி 04 ஆம் திகதி காலிமுகத்திடலில் விமர்சையாகக் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
75 ஆவது சுதந்திர தின நிகழ்வின் ஏற்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இப்பணிப்புரையை விடுத்தார்.
பெப்ரவரி 04 மற்றும் 05 ஆம் திகதிகளில், தேசிய பூங்காக்கள் பொதுமக்களுக்கு இலவசமாக திறக்கப்பட இருப்பதோடு 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுடன் இணைந்ததாக நினைவு தபால் தலையும் வெளியிடப்படவுள்ளது.
சுதந்திர தின நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவானது 10 உப குழுக்களைக் கொண்டுள்ளதோடு, சுதந்திர தின விழாவைக் காண பொதுமக்களுக்கு திறந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சுதந்திர தினத்தன்று நாடுபூராவும் உள்ள அனைத்து அரச நிறுவன கட்டிடங்களிலும் தேசியக் கொடியை காட்சிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.