அரசியல்
ஊடகங்களை நசுக்கத் திட்டம்!
தற்போதைய அரசாங்கம் புதிய சட்டங்களைப் பயன்படுத்தி வெகுஜன ஊடகங்களையும் மக்கள் போராட்டங்களையும் தீவிரமாக நசுக்கத் தயாராகி வருவதாக நாட்டின் பிரபல தொழிற்சங்கத் தலைவர் எச்சரிக்கிறார்.
“ஊடகங்களை கட்டுப்படுத்த ஊடகவியலாளர்களுக்கான அதிகார சபையொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளது”
சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி இணையத்தளங்களில் எழுதுபவர்களை கண்காணித்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு சட்டங்கள் மூலம் அடக்குமுறையை அரசு கொண்டுவருகிறது என்பதை வலியுறுத்திய ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின், நாட்டு மக்களுக்கு பேச்சு சுதந்திரம் உள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் பல இடங்கள் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த சிரேஷ்ட தொழிற்சங்க தலைவர், தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் அனைத்து இடங்களும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
“கொழும்பில் உள்ள அனைத்து முக்கிய போராட்ட மையங்களும் இதற்கு உட்பட்டுள்ளன.”
அரச இரகசிய சட்டத்தின் இரண்டாவது பிரிவின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் உள்ள எட்டு வலயங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார்.
பொலிஸ் மா அதிபர் அல்லது மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் முன் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி அவ்விடங்களில் பொதுக்கூட்டம் அல்லது எந்த விதமான செயற்பாடுகளும் நடாத்தப்படக் கூடாது என உரிய வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உயர் பாதுகாப்பு வலயங்களில் ஊர்வலமோ, ஆர்ப்பாட்டமோ நடத்தினால் உயர்நீதிமன்றத்தின் ஊடாகவே பிணைக்கு விண்ணப்பிக்க வேண்டுமென ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
“இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது எமக்குத் தெரியும். கமல் குணரத்ன, தேஷபந்து தென்னகோன், இவர்கள் அனைவரும் ரணிலின் ஆசியுடன் இணைந்து செயற்படுகின்றனர். இந்த அடக்குமுறைக்கு துணைச் சட்டங்களை உருவாக்குகின்றனர். இவை ஜனநாயக விரோதச் செயல்கள்.”
போராட்டங்களை ஒடுக்கும் அரசாங்கம், மறுபுறம் ஊடகங்களை அடக்கி அரசாங்கத்திற்கு எதிராக உருவாகும் சக்திகளை ஒடுக்குவதற்கு தயாராகி வருவதாகத் தெரிவிக்கும் தொழிற்சங்கத் தலைவர், தொழிற்சங்க இயக்கம் உள்ளிட்ட பரந்த ஜனநாயக சக்திகள் இதற்கு எவ்வகையிலும் இடமளிக்கப் போவதில்லை என வலியுறுத்தியுள்ளார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login