அரசியல்
தியாகதீபம் திலீபனின் 35ஆவது ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள்!


தியாகதீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நிகழ்வு இதுவரை காலமும் இல்லாத அளவுக்கு மாபெரும் எழுச்சியாக இடம்பெறவுள்ள நிலையில், எங்கள் உறவுகள் அனைவரும் இன்று காலை-10 மணிக்கு நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபன் நினைவாலயத்திற்கு வருகை தந்து உங்கள் அஞ்சலிகளையும், வணக்கங்களையும் செலுத்துமாறு தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு சார்பில் வேண்டி நிற்கின்றோம் எனத் தவத்திரு. வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை(25) நல்லூரில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று காலை-8.30 மணி முதல் நண்பகல்-12 மணி வரை நல்லூரில் தியாகதீபம் திலீபனின் நினைவாலயம் அமைந்துள்ள யாழ்.பருத்தித்துறை வீதி மூடப்பட்டிருக்கும்.
இன்று காலை-8 மணிக்கு தியாகதீபம் திலீபன் பிறந்த இல்லமான ஊரெழுவிலிருந்து ஊர்திப் பவனி ஆரம்பித்து நல்லூரை வந்தடைய உள்ளது. சரியாக முற்பகல்-10.48 நிகழ்வில் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் பொதுச் சுடரேற்றல், அகவணக்கம், மலர்மாலை அணிவித்தல், மலர்கள் செலுத்துதல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன.
எனவே, அனைத்துத் தமிழ் உறவுகளும் தவறாது வருகை தந்து அஞ்சலி செலுத்தி ஒரு எழுச்சியை ஏற்படுத்த வேண்டும். மக்கள் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் அனைவரும் திலீபன் நினைவேந்தலைப் பெரு எழுச்சியாக முன்னெடுக்க வேண்டும்.
இன்று காலையிலிருந்து நண்பகல்-12 மணி வரை யாழ்.மாவட்டத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களை மூடி வர்த்தகர்கள் அனைவரும் நினைவாலயத்திற்கு வருகை தந்து கலந்து கொள்வதற்கு வணிகர் கழகங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அன்புரிமையுடன் வேண்டுகின்றோம்.
யாழ்.மாவட்டத்தின் எந்தப் பகுதிகளிலிருந்தும் தமிழ் உறவுகள் நல்லூரில் இடம்பெறும் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்வதற்கு அவர்களை இலவசமாகப் பயணிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் யாழ்.மாவட்டத் தனியார் போக்குவரத்துச் சங்கத்தினரிடமும் அன்புரிமையுடன் வேண்டுகின்றோம்.
அத்துடன் தியாகதீபம் திலீபன் நினைவேந்தலின் இறுதிநாளில் உங்களுடைய பேருந்துகளிலும், வாகனங்களிலும் தியாகதீபம் திலீபனின் எழுச்சிப் பாடல்களை ஒலிபரப்ப வேண்டும். அவ்வாறு ஒலிபரப்பும் போது எங்கள் மக்கள் அனைவரும் தியாகதீபம் திலீபனின் உண்ணா நோன்பின் மகத்துவத்தையும், அந்த நோக்கத்தையும் நோக்கத்தையும் உணர்வார்கள் – என்றார்.