இலங்கை
பலாலி விமான சேவை! – தடைக்கு வரி விதிப்பே காரணம்


” இரத்மலானை மற்றும் மத்தள விமான நிலையங்களில் பயணிகளுக்கான வரி இரத்து செய்யப்பட்டுள்ளது போல பலாலிக்கும் செய்தால் விமான சேவை உடனடியாக ஆரம்பமாகும். இந்திய நிறுவனம் தயார் நிலையிலேயே உள்ளது.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்தார்.
அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவால் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” இந்தியாவின் எயா வேர்ஸ் நிறுவனம் இதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. எனவே, எவரும் விமானம் கொண்டுவரவிலை எனக் கூற வேண்டாம். இந்திய நிறுவனம் தற்போதுகூட தயார் நிலையில்தான் உள்ளது.
எனவே, கொழும்பு மற்றும் மத்தளவில் எவ்வாறு, பயணிகளுக்கான வரியை இல்லாது செய்துள்ளீர்களோ, அதேபோல் பலாலிக்கு அதிகமாக விதிக்கப்பட்டுள்ள வரிசை இல்லாது செய்தால்தான் சேவை சாத்தியமாகும். இரண்டு வருடங்களுக்காவது இதனை செய்யுங்கள், விமான சேவை உடனடியாக சாத்தியமாகும்.” – என்றும் சிறிதரன் எம்.பி. குறிப்பிட்டார்.