அரசியல்
பலாலிக்கு ஒரு விமானத்தையாவது கொண்டு வாருங்கள்!


” பலாலி விமான நிலையத்துக்காக எமது தரப்பில் இருந்து செய்யக்கூடிய அனைத்தையும் செய்துவிட்டோம். ஆனால் விமானங்கள் வருவதில்லை. எனவே, ஒரு விமானத்தையாவது கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுங்கள்.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பலாலி விமான நிலையத்துக்கு யாழ். மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே வேலைக்கு அமர்த்தப்பட்டனர். வெளி மாவட்டங்களில் இருந்து எவரும் கொண்டு செல்லப்படவில்லை.
விரைவில் விமான நிலையத்தை திறக்கவும், விமானங்கள் அனுப்படும் என சில விமான சேவை நிறுவனங்கள் உறுதியளித்திருந்தன. ஆனால் இதுவரையும் விமானம் அழைத்துவரப்படவில்லை.
தேவையான ஏற்பாடுகளை நாம் செய்துகொடுத்துள்ளோம்.
இந்திய எயார் லைன் வருமெனக் கூறப்பட்டது. வரவில்லை, தூதனுப்பினோம். தீர்வு இல்லை. பிரச்சினைகள் இருந்தால் எம்முடன் பேச்சு நடத்தலாம். அதற்கான கோரிக்கையும் விடுக்கப்படவில்லை.
பலாலி விமான நிலையத்துக்காக பெருமளவு நிதி செலவிடப்பட்டுள்ளது. பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது. எனவே, இந்தியாவுக்கு சென்று பேச்சு நடத்தி, ஒரு விமானத்தையாவது கொண்டு வாருங்கள். எமது தரப்பில் செய்யக்கூடிய அனைத்தையும் செய்துள்ளோம்.” – என்றார்.