அரசியல்
6ஆம் திகதி கூடுகிறது நாடாளுமன்று!
நாடாளுமன்றம் எதிர்வரும் 06ஆம் திகதி முதல் 09ஆம் திகதி வரை கூடவிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக தெரிவித்தார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்றஅலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதற்கமைய எதிர்வரும் 6, 7 மற்றும் 8ஆம் திகதிகளில் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணிவரை நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய கூட்டத்தொடரில் வாய்மூல விடைக்கான கேள்விகள் முதன் முதலில் கேட்கப்படும் சந்தர்ப்பமாக இது அமைகிறது.
எதிர்வரும் 6ஆம் திகதி மு.ப 10.30 மணி முதல் 10.45 மணி வரை சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டமூலம் மற்றும் ஏற்றுமதி இறக்குமதிக் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி என்பன விவாதம் இன்றி நிறைவேற்றப்படவுள்ளன.
இதனைத் தொடர்ந்து மு.ப 10.45 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சி கொண்டுவரும் பிரேரணைக்கு அமைய “இலங்கையின் குழந்தைகள் மற்றும் தாய்மாரின் போஷாக்கின்மை நிலைமைகள்” குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
எதிர்வரும் 7ஆம் திகதி “இலங்கையின் குழந்தைகள் மற்றும் தாய்மாரின் போஷாக்கின்மை நிலைமைகள்” தொடர்பிலான ஒத்திவைப்பு வேளை விவாதம் இரண்டாவது நாளாக காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 08ஆம் திகதி மு.ப 10.30 மணி முதல் 11.00 மணி வரை கைத்தொழில் பிணக்குகள் (திருத்தச்) சட்டமூலம் இரண்டு (130,131) மற்றும் வேலையாட்களின் தொழிலை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் என்பன விவாதம் இன்றி நிறைவேற்றப்படும். இதன் பின்னர் 2022ஆம் ஆண்டின் அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கை குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் மு.ப 11.00 மணி முதல் பி.ப 5.30 மணிவரை நடைபெறவிருப்பதாக செயலாளர்நாயகம் குறிப்பிட்டார்.
இதேவேளை, மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள தொடர்பான அனுதாபப் பிரேரணைக்காக எதிர்வரும் 09ஆம் திகதி ஒதுக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login