இலங்கை
நல்லூர் சித்திரத் தேர் வெள்ளோட்டம்
சரித்திரப் புகழ்மிக்க யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவிலின் புனருத்தாரணம் செய்யப்பட்ட சித்திரத்தேர் வெள்ளோட்டம் இன்று 24 ஆம் திகதி, புதன்கிழமை காலை 7 மணியளவில் இடம்பெற்றது.
பெருமளவான பக்தர்கள் புடைசூழ சித்திரத்தேர் வெள்ளோட்டம் இடம்பெற்றது.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பரிபாலகர்களான மாப்பாண முதலியார் பரம்பரையில் வந்துதித்த மூன்றாம் இரகுநாத மாப்பாண முதலியார் காலத்தில் ஆலயத்துக்கான முதலாவது தேர் உருவாக்கப்பட்டது.
அதன் பின்னர் இரண்டாம் ஆறுமுக மாப்பாண முதலியார் அழகன் முருகனுக்கான தங்க ஆபரணங்கள் மற்றும் வெள்ளி சிங்காசனம் ஆகியவற்றைச் செய்து அழகன் முருகனை அழகு பார்த்தார். இவரது காலத்தில் சண்முகப் பெருமான் ஸ்தாபிக்கப்பட்டதுடன், சண்முகரே தேரில் ஏறி, பக்தர்களுக்கு அருள் பாலிக்கவும் தொடங்கினார்.
நல்லூரில் பாவனையில் இருந்த தேர் பழுதடைந்த நிலையில் இருந்த காரணத்தினால், அதன் அபாயத்தை உணர்ந்த ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார், புதிய தேர் ஒன்றை 1964 ஆம் ஆண்டு திருப்பணி நிறைவேற்றி, தானும் வடம் பிடித்து இழுத்து இரதோற்சவத்தை இன்னும் அழகாக்கினார். அந்தத் தேரே மீண்டும் புனருத்தாரணத் திருப்பணி நிறைவுற்று இன்று (24) புதன்கிழமை வெள்ளோட்டம் கண்டது.
ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார் மறைவுக்குப் பின்னர் அவரது தம்பியாரான குமாரதாஸ் மாப்பாண முதலியார் நல்லூர் கோயிலின் 10 ஆவது கோயில் அதிகாரியாக, மிக இள வயதில் பொறுப்பேற்றார்.
நல்லூர் பக்தர்களைப் பொறுத்த வரையில் அழகன் முருகனுக்கு மிகவும் பிடித்த கோயில் அதிகாரியாக குமாரதாஸ் மாப்பாண முதலியார் கருதப்படுகிறார். தொடர்ச்சியாக 55 வருடங்களுக்கு மேலாக இவர் முருகனுக்குத் தொண்டாற்றி வந்தார். இவர் கோயில் அதிகாரியாகப் பொறுப்பேற்ற 1965 ஆம் ஆண்டு தொடக்கம் நல்லூர் வருடாந்த மகோற்சவத்திற்கு முன்னர் வருடா வருடம் கோயிலுக்கான திருப்பணியை நிறைவேற்றினார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login