இலங்கை
காலம் கடத்தினால் பெரும் ஆபத்தை சந்திக்க நேரிடும்!
போதைவஸ்து பிரச்சினைகள் தொடர்பாக யாழ் பிராந்தியத்துக்கு பொறுப்பாக இருக்கின்ற பொலிஸ் அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர் மற்றும் சமூக அமைப்புக்களின் தலைவர்கள், பிரதேச செயலர்கள் தடுத்து நிறுத்தும் வழிமுறைகளை கையாளாது காலம் கடத்தினால் பெரிய ஆபத்தை எங்கள் பகுதி சந்திக்கும் என்பதில் ஐயமில்லை என சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் தெரிவித்தார்.
போதைவஸ்து பாவனை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
வடபகுதியில் குறிப்பாக யாழ்குடா நாட்டில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள மிக முக்கியமான பிரச்சனை போதை வஸ்து பிரச்சனையாகும். ஒரு சில மாதங்களுக்குள் 8 இளைஞர்கள் போதைவஸ்துக்கு அடிமையாகி அதிகமான போதை ஊசிகளையேற்றிய காரணத்தினால் மரணத்தை சந்தித்திருக்கிறார்கள்.
இந்தக் கொடுமையான சம்பவம் கலை பண்பாட்டுக்கு பேர்போன யாழ்ப்பாணத்தில் இடம்பெறுவது மிக கவலையானது. மக்கள் பிரதிநிதிகள், கல்விமான்கள், பொறுப்பாளர்கள் இவ்விடயம் சார்ந்து சரியான அக்கறை எடுக்காத காரணத்தினால் போதையினால் கொடூரமான சம்பவங்கள் வடக்கில் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. குறிப்பாக பெரிய கல்லூரிகள், பல்கலைக்கழகச் சூழல்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் போதைவஸ்து வணிகத்துக்குரிய இடங்கள் என்று கூட சில இடங்களை பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
போருக்கு பின்னால் எவ்வளவோ இளைய தலைமுறையை இழந்திருக்கின்ற நிலையிலே தொடர்ந்து இளைய தலைமுறை அநியாயமாக போதை வஸ்தால் மரணத்தை சந்திக்கின்றார்கள்.
போதைவஸ்து பாவனை கட்டுக்கடங்காமல் இளைய தலைமுறை இடையில் அதிகரித்து காணப்படுகின்றது. யார் இதை செய்விக்கின்றார்கள் , போதை வஸ்து எவ்வாறு குடா நாட்டுக்குள் வந்து சேர்கின்றது, போதை வஸ்துக்கு அடிமையானவர்களுக்கு மாற்று வழி என்ன என்பது தொடர்பாக கேள்வி காணப்படுகிறது.
போத வஸ்து முற்றுமுழுதாக வடக்கிலோ கிழக்கிலோ மலையகத்திலோ இலங்கையினுடைய எந்த பாகத்திலாவது உடனடியாக தடுப்பதற்கான வழிகளை கையாள விட்டால் மிகப்பெரிய ஆபத்தை இந்த நாடு சந்திக்கும். குறிப்பாக தமிழ் மக்களை பொறுத்தவரை பல இழப்புகளைச் சந்தித்தவர்கள். இன்று எமது சனத்தொகை மிகவும் வீழ்ச்சி அடைந்திருக்கின்றது.வடக்கில் சனத்தொகை என்றும் இல்லாதவாறு குறைந்திருக்கின்றது.
குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாணவர் தொகை குறைவு காரணமாக பல பாடசாலைகள் மூடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்ல புலம்பெயர் தேசங்களை நோக்கி எம்மவர்கள் செல்வதனால் எங்களது சமுதாயத்தில் பிறப்பு வீதம் மக்கள் தொகை என்பது ஈடு செய்ய முடியாத அளவுக்கு குறைந்து கொண்டே சொல்கின்றது. எனவே இந்த நிலையில் இருப்பவர்களையாவது நல்லவர்களாக வல்லவர்களாக நாட்டுக்கு உகந்தவர்களாக சமுதாயத்தினுடைய பொறுப்புடையவர்களாக காப்பாற்ற வேண்டிய கடமை அனைவருக்கும் முன்னுள்ள தலையாய கடமையாகும்.
போதை வஸ்துகள் பிடிபட்டதாக செய்திகள் வந்தாலும் அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை தொடர்பாகவோ அவர்களை சமூகத்தில் பிணையில் விடுகின்ற போது அவர்கள் சமூகத்தோடு மீண்டும் தங்களுடைய தொழிலை செய்ய தொடங்குகின்ற போது வருகின்ற பாதிப்பு என்பது எல்லை இல்லாதது. எனவே பல தடவை மதிப்புக்குரிய நீதிமன்றங்கள் நீதிபதிகளெல்லாம் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.
யாழ்ப்பாணத்து சூழ்நிலை எவ்வாறு போகின்றது என்று பொறுப்பு வாய்ந்த நீதிமன்றங்கள் நீதிபதிகள் எல்லாம் போதை வஸ்து செயலில் ஈடுபடுபவர்களை கண்டித்து இருக்கிறார்கள். ஆனால் சமூகத்தினுடைய முக்கிய பொலிஸ் பொறுப்பு அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்கள், மதிப்பார்ந்த பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் சென்றவர்கள் இந்த விடயங்கள் தொடர்பில் இதுவரை ஆக்கபூர்வமான முடிவையும் எடுக்காத காரணத்தினால் எங்கள் சமுதாயம் மிகக் கேவலமான நிலைக்கு வந்துவிட்டது.
வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்திலேயே போதைவஸ்தில் கூடுதலாக பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் காணப்படுகிறார்கள். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கான அவசரமான தீர்மானத்தை ஒற்றுமையாக முன்னெடுத்து தடுப்பதற்கு என்ன வழி என்று சரியாக ஆராய்ந்தது இல்லை. நாடாளுமன்றத்தில் சிலர் இதுபற்றி பேசுகிறார்கள். ஆனால் பேச்சுக்கு பின்னாலும் எந்த பலனும் கிடைக்கவில்லை.
பொறுப்பு மிக்கவர்கள் உடனடியாக வடக்கிலே மிக முக்கியமான கூட்டத்தை நடத்தி தமிழர்களுடைய அதிகளவில் போதை வஸ்து செல்வதற்குரிய காரணத்தை கண்டறிந்து அதனை தடுப்பதற்கான சரியான வழியை பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் கிராமங்களிலும் போதைவஸ்து உள்ளே எவ்வாறு வருகின்றது என்பது தொடர்பில் ஆராய விழிப்பு குழுக்களை போட வேண்டும்.
போதைவஸ்தால் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்க தொடங்கிவிட்டோம். குறிப்பாக இந்த விடயம் தொடர்பாக யாழ் பிராந்தியத்துக்கு பொறுப்பாக இருக்கின்ற பொலிஸ் அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர் மற்றும் சமூக அமைப்புக்களின் தலைவர்கள், பிரதேச செயலர்கள் தடுத்து நிறுத்த வழிமுறைகளை கையாளாது காலம் கடத்திடுவோமானால் பெரிய ஆபத்தை எங்கள் பகுதி சந்திக்கும் என்பதில் ஐயமில்லை.
வடக்கு கிழக்கு மலையகத்திலே அதிகமாக தமிழர் பகுதியிலே இன்று தாண்டவமாடும் போதை வஸ்தை உடனடியாக தடுப்பது தடுத்து நிறுத்துவதற்கு ஆவண செய்யப்பட வேண்டும். வீதி நாடகத்தாலோ போதைப் பொருள் தடுப்பு தினத்தை கொண்டாடுவதாலோ போதைவஸ்தை தடுக்க முடியாது. அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் – என்றார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login