அரசியல்
சர்வதேச மன்னிப்புச் சபை அரசிடம் விடுத்துள்ள கோரிக்கை!!
போராட்டக்காரர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்த வேண்டாம் என சர்வதேச மன்னிப்புச் சபை, இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை கவலை வெளியிட்டுள்ளது.
கடந்த 18 ஆம் திகதி நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வசந்த முதலிகே உள்ளிட்ட 19 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 15 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, ஹாஷாந்த ஜீவந்த குணத்திலக்க உள்ளிட்ட மூவர், 72 மணித்தியால தடுப்புக் காவல் உத்தரவின் பிரகாரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அவர்களைத் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, போராட்டக்காரர்கள் மீது தன்னிச்சையான தடுப்புக்காவல் மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுகள் போன்ற நியாயமற்ற கடுமையான குற்றங்களை சுமத்துவது சர்வதேச சட்டத்திற்கு முரணானது என சர்வதேச மன்னிப்புச் சபை கூறியுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
அதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசு பயன்படுத்துவது, அடக்குமுறையின் ஓர் அங்கம் என அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
#SriLankaNews
You must be logged in to post a comment Login