இலங்கை
தற்காலிக வகுப்புத்தடை! – யாழ். பல்கலை மாணவன் உயிர்மாய்க்க முயற்சி
பகிடிவதையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ள மாணவர்களில் ஒருவர் தவறான முடிவெடுத்து , உயிரை மாய்க்க முயன்ற நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மாதம் யாழ்ப்பாண பல்கலைக்கழக புதுமுக மாணவர்களை தெல்லிப்பளை பகுதிக்கு அழைத்து பகிடிவதை புரிந்தனர் என குற்றம் சாட்டப்பட்ட 18 மாணவர்களுக்கு தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
பகிடிவதை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பல்கலைக்கழக நிர்வாகம் முன்னெடுத்து வரும் நிலையில் விசாரணைக்கு ஏதுவாக 18 மாணவர்களுக்கும் தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்பட்டது.
அந்நிலையில் விரிவுரையாளர் ஒருவர் தனது விரிவுரையில், வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவர்களின் புகைப்படங்களை காண்பித்து ” இவர்கள் தான் பல்கலைக்கழக மாபியாக்கள்” என கூறி 18 மாணவர்கள் தொடர்பிலும் தவறான தகவல்களை மாணவர்கள் மத்தியில் கூறியுள்ளார்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவர்களால் , பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டது. நிர்வாகம் அது தொடர்பில் கரிசனை கொள்ளவில்லை என மாணவர்கள் தெரிவித்தனர்.
அந்நிலையில் தமது புகைப்படங்களை காண்பித்து மாணவர்கள் மத்தியில் தவறான தகவல்களை பரப்பியமை தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டது. குறித்த முறைப்பாடு குறித்து யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவர்களில் ஒரு மாணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்க்க முயன்ற நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login