இலங்கை
புதுக்குடியிருப்பு பொலிஸாரின் அத்துமீறல் – வடக்கு இ.நி.சே.சங்க செயற்பாட்டிற்கு வடக்கு அ.உ.சங்கம் முழு ஆதரவு!
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரை அவமதிக்கும் விதமாகச் செயற்பட்ட பொலிஸாரின் நடவடிக்கையை கண்டித்து வடமாகாண இலங்கை நிர்வாக சேவையாளர் சங்கம் நாளை (08) திங்கட்கிழமை முன்னெடுக்கும் எதிர்ப்பு நடவடிக்கைக்கு வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் முழுமையான ஆதரவை வெளியிட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அண்மையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் சட்டவிரோதமான முறையில் எரிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, அவ் விடயம் தொடர்பில் பொலிசார் மேற்கொண்ட மேல் நடவடிக்கை அத்துமீறியதாகவும் குறித்த பிரதேச செயலாளரை தனிப்பட்ட ரீதியில் அவமதிப்பதாகவும் அரச சேவையையும் மலினப்படுத்துவதாகவும் அமைந்திருந்தது.
சட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டிய பொலிசாரே இவ்வாறு முறையற்ற விதத்தில் நடந்துகொண்டமை கண்டனத்துக்குரியது. எனவே மேற்படி பொலிசாரின் அத்துமீறிய நடவடிக்கை தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு சட்டநடவடிக்கை எடுக்குமாறு உரிய தரப்பினரை கோரி நிற்கின்றோம்.
மேலும், மேற்படி பொலிசாரின் முறையற்ற நடவடிக்கைக்கு எதிராக வடமாகாண இலங்கை நிர்வாக சேவையாளர் சங்கத்தினால் 08.08.2022 திங்கட்கிழமை முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு நடவடிக்கைக்கு வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் தனது முழுமையான ஆதரவை தெரிவிப்பதுடன் எமது ஒத்துழைப்பையும் வழங்க தயாராக இருக்கின்றோம் என்பதை அறியத்தருகின்றோம். – எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login