அரசியல்
மக்களின் எதிர்பார்ப்பை நாடாளுமன்றம் நிறைவேற்றவில்லை!
” நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நாடாளுமன்றம் நிறைவேற்றவில்லை. அதனை இந்த நாடாளுமன்றம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கவும் இல்லை.” – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியா தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றது.
தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மூவரும் கருத்துகளை முன்வைத்தனர். அவ்வேளையிலேயே அநுர குமார திஸாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டார்.
” ஜனாதிபதி தேர்தல் குறித்து பல தரப்புகள், கட்சிகளுடன் நாம் பேச்சுகளை நடத்தியிருந்தோம்.
இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு சபாநாயகரின் பெயரும், பிரதமர் பதவிக்கு சுமந்திரன் எம்.பியின் பெயரும் ஒரு யோசனையாக முன்வைக்கப்பட்டது. மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில், அந்த யோசனையை நிறைவேற்றி, சிறந்த முன்னுதாரணத்தை வழங்கியிருக்கலாம்.
ரவூப் ஹக்கீமுடனும் பேச்சு நடத்தினோம். ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளை இரு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கலாம் என்ற சிறந்த யோசனையை அவர் முன்வைத்தார். அதனை நிறைவேற்றி இருந்தால்கூட நாடாளுமன்றம்மீதான கௌரவம் அதிகரித்திருக்கும்.
குறுகிய காலத்துக்கு இவ்வாறு அமையும் அரசின், கூட்டு அமைச்சரவையில் பதவிகளை ஏற்கவும் நாம் தயாராக இருந்தோம். அமைச்சரவை எண்ணிக்கை 10 ஆக வரையறுக்கப்பட்டது. எனினும், மேற்படி யோசனைகள் எல்லாம் தோற்கடிக்கப்பட்டன.
இதனால்தான் நான் வேட்பாளராக போட்டியிட்டேன். 3 வாக்குகள்தான் கிடைக்கும் என்பது எனக்கு தெரியும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, சுயாதீன அணிகள் என்பன டலசுக்கு ஆதரவு வழங்கபோவதாக அறிவித்தன. எனினும், கொள்கை காப்பாற்றப்படவில்லை.
18 ஆவது திருத்தச்சட்டமூலம், 52 நாட்கள் அரசியல் சூழ்ச்சி மற்றும் 20ஆவது திருத்தச்சட்டமூலம் ஆகியவற்றின்போது எம்.பிக்கள் விலைபோனார்கள். தற்போதும் அது நடந்துள்ளது. இந்த கருத்தை சொல்வதால் சிலருக்கு வலிக்கலாம். எனினும், அதனை நான் மீளப்பெறபோவதில்லை.
எனவே, கூடிய விரைவில் மக்கள் ஆணையுடன் அரசொன்று அமைய இடமளிக்கப்பட வேண்டும்.” – என்றும் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.
You must be logged in to post a comment Login