அரசியல்
நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியாவே உதவியது!


கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை நிலைமை குறித்து ஆராய அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் இந்தியாவில் நேற்று நடைபெற்றது.
இந்தக்கூட்டத்தில், ப சிதம்பரம், பரூக் அப்துல்லா, டி.ஆர்.பாலு, எம் தம்பிதுரை, வைகோ, உள்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் எம்.பி.க்கள் பங்கேற்றனர். மேலும், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்பட 8 மத்தியஅமைச்சர்களும் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டம் நிறைவு பெற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவிக்கையில்,
இன்றைய கூட்டத்தில் இலங்கைக்கு உதவும் நடவடிக்கைகள் குறித்து அரசியல் மற்றும் வெளியுறவு கொள்கை கண்ணோட்டத்தில் நாங்கள் விளக்கம் அளித்தோம். இலங்கையின் தற்போதைய அரசியல் கொந்தளிப்பு, பொருளாதார நெருக்கடி, கடன் நிலைமை குறித்து விளக்கப்பட்டது.
நமது அண்டை நாட்டில் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டதால், அது எங்களுக்கு ஆழ்ந்த கவலை அளிக்கும் விஷயம். மீனவர் பிரச்சினை உள்பட இலங்கையுடன் நீண்ட கால பிரச்சினைகள் உள்ளன.
இந்த ஆண்டு இலங்கைக்கு இந்தியா வழங்கிய நிதி உதவி போல் வேறு எந்த நாடும் இந்த அளவு ஆதரவை வழங்கவில்லை. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பலர், இலங்கை பொருளாதார நெருக்கடியை இந்தியா ஒரு பாடம் போல் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினர் – என்றார்.