இலங்கை
முடங்குகிறது நாடு? -அத்தியாவசிய சேவைக்கு மட்டுமே எரிபொருள்
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் ஜுலை 10 ஆம் திகதிவரை அத்தியாவசிய சேவைகள் மாத்திரமே முன்னெடுக்கப்படும் எனவும், அதற்கு தேவையான எரிபொருள் மாத்திரமே விநியோகிக்கப்படும் எனவும் அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.
சர்வக்கட்சி அரசாங்கம் என பெயரிடப்பட்டுள்ள அரசின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று (07) மாலை நடைபெற்றது.
இதன்போதே இம்முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை கூட்டம் முடிவடைந்த பின்னர், அவசர ஊடக சந்திப்பொன்று இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர்களான பந்துல குணவர்தன, ஹரின் பெர்ணான்டோ ஆகியோர் பங்கேற்று கருத்துகளை முன்வைத்தனர்.
” இன்று நள்ளிரவு முதல் ஜுலை 10 ஆம் திகதிவரை நாட்டில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே முன்னெடுக்கப்படும். துறைமுகம், சுகாதாரம், உணவு விநியோகத்துக்கான போக்குவரத்து, விவசாய நடவடிக்கைக்கான தேவைப்பாடுகள், சுற்றுலாத்துறை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஊடாக டீசல் மற்றும் பெற்றோல் விநியோகிக்கப்படும்.” – என்று அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.
அத்துடன், ஏனையோர் வீடுகளில் இருந்து பணிகளை முன்னெடுக்கலாம் எனவும், அத்தியாவசிய சேவைகள் முடங்காமல் இருப்பதற்காகவே இந்த ஏற்பாடு எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அதேபோல கிராமியபுற பாடசாலைகள் இயங்கும், ஏனையவை 10 ஆம் திகதிவரை மூடப்படும்.
உள்ளக போக்குவரத்து இடம்பெற்றாலும், மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் எனவும் உள்ளக போக்குவரத்துக்கான எரிபொருள் இ.போ.ச. ஊடாக வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அமைச்சர் பந்துல குறிப்பிட்டார்.
அதேவேளை, ஜுலை 10 ஆம் திகதிக்கு பிறகு எரிபொருள் மற்றும் எரிவாயுவை தடையின்றி விநியோகிக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்ட அமைச்சர், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதியளித்தார்.
” இது லொக்டவுன் அல்ல. 10 ஆம் திகதிவரை வீடுகளில் இருந்து பணிகளை முன்னெடுக்கலாம். கடைகள், பாமசிகள் திறந்திருக்கும். ஜுலை 10 ஆம் திகதிக்கு பிறகு நாடு வழமைபோல இயங்கும்.” – என்று அமைச்சர் ஹரின் குறிப்பிட்டார்.
You must be logged in to post a comment Login