இலங்கை
பாழடையும் நிலையில் யாழ்.மத்திய கல்லூரி நீச்சல் தடாகம்!
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி நீச்சல் தடாகம் பராமரிப்புகள் இன்றி பாசிகள் படர்ந்து , பாழடையும் நிலையில் காணப்படுகிறது.
இளைஞர்களுக்கான நாளைய அமைப்பினால் சுமார் 2 கோடி ரூபா செலவில் புதிதாக கட்டப்பட்ட நீச்சல் தடாகத்தை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவினால் கடந்த 2012ஆம் ஆண்டு பெப்ரவரி 6ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து சில மாத காலம் மாணவர்களுக்கான இலவச நீச்சல் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டன. பின்னரான கால பகுதியில் நீச்சல் தடாகம் பராமரிப்புக்கள் இன்றி கைவிடப்பட்டுள்ளன. ஆடைகள் மாற்றும் அறைகள் உடைந்த நிலையில் காணப்படுகின்றன
இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அமைச்சரவை கூட்டத்தில் நீச்சல் தடாக புனரமைப்பு மற்றும் தொடர் பராமரிப்பு தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டதை அடுத்து , நீச்சல் தடாகத்தை புனரமைத்து சிறப்பான முறையில் பயன்படுத்துவதற்கான பொறிமுறையை உருவாக்குவது என தீர்மானிக்கப்பட்டது.
அதற்கு ஜனாதிபதி மற்றும் அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்சே இணக்கம் தெரிவித்து இருந்தனர்.
அதனை தொடர்ந்து கடந்த வருடம் யூன் மாதம் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ யாழ் மத்திய கல்லூரியின் நீச்சல் தடாகத்தையும் பார்வையிட்டு சென்றிருந்தார்.
இந்நிலையில் அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டு , ஜனாதிபதி , பிரதமரின் இணக்கம் தெரிவிக்கப்பட்டு ஒரு வருட காலம் கடந்த நிலையிலும் இன்னமும் நீச்சல் தடாக புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கவிடவில்லை.
பெரும் செலவில் அமைக்கப்பட்ட நீச்சல் தடாகத்தை பராமரிக்க ஒரு பொறிமுறை உருவாக்கப்படாமையே நீச்சல் தடாகம் இந்நிலையில் இருக்க காரணம் என பலரும் விசனம் தெரிவிக்கின்றனர்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login