அரசியல்
மே 9 வன்முறை! – விசாரணையை ஆரம்பிக்கிறது பொதுநலவாய அமைப்பு?
இலங்கையில் மே – 09 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில், விசாரணை நடத்துமாறு பொதுநலவாய அமைப்பிடம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றம் நேற்று (10) முற்பகல் 10 மணிக்கு பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தலைமையில் கூடியது.
இதன்போது நாட்டில் மே – 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின் கொல்லப்பட்ட, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரளவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணைமீதான விவாதம் இடம்பெற்றது.
ஆளுங்கட்சி எம்.பிக்கள் மேற்படி சம்பவத்தை கண்டிக்கும் வகையில் கறுப்பு பட்டி அணிந்தே சபை அமர்வில் பங்கேற்றிருந்தனர்.
இவ்விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்படி தகவலை வெளியிட்டார்.
“மே – 09 சம்பவம் நாடாளுமன்ற கட்டமைப்புமீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும். இது தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்த வேண்டியுள்ளது.
உள்ளக கட்டமைப்பில் விசாரணை நடத்துவதில் சிக்கல் உள்ளதெனில், வெளியாக பொறிமுறையை நாடலாம்.
பொதுநலவாய நாடாளுமன்ற அமைப்பின் செயலாளருக்கு நான் கடிதமொன்றை அனுப்பியுள்ளேன். கோல்பேஸ் தாக்குதல் உட்பட அனைத்து சம்பவங்கள் தொடர்பிலும் ஆராயுமாறு கோரியுள்ளேன். எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் எவை என அறிக்கை முன்வைக்குமாறும் கோரியுள்ளேன்.
இது தொடர்பில் சபாநாயகரும் கோரிக்கை விடுக்கலாம்.” – என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
You must be logged in to post a comment Login