இலங்கை
அரச உத்தியோகத்தர்கள் வெளிநாடுகளில் பணியாற்ற அனுமதி!!!


அரச உத்தியோகத்தர்கள் வெளிநாடுகளில் பணியாற்ற அனுமதிப்பது தொடர்பான சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படுமென, இணை அமைச்சரவைப் பேச்சாளர் தொழிலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அரச உத்தியோகத்தர்கள் வெளிநாடுகளுக்கு தொழில்வாய்ப்புக்காகச் செல்லும்போது, அவர்களது ஓய்வூதியம் மற்றும் சேவை மூப்புக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாதவாறு சுற்றறிக்கையை வெளியிடுவதற்குத் தேவையான ஒழுங்குமுறைகளை சுகாதார அமைச்சும் பொது நிர்வாக அமைச்சும் வகுத்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
வௌிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களிடமிருந்து பணம் அனுப்புவதை அதிகரிப்பதன் மூலம், நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில் துரித வேலைத்திட்டத்தின் கீழ் அரச ஊழியர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
நிதி நெருக்கடிக்கு தீர்வு காணவே பல்வேறு திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன.
இலவசக் கல்வியில் கற்று வௌிநாட்டில் தொழில் புரிவோருக்கு தமது நாட்டுக்கு உதவ சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. ராஜபக்ஷவினர் வீட்டுக்கு செல்லும் வரை பணம் அனுப்பமாட்டோம் என்றால் எமது நாட்டு மக்கள் இறக்கும் நிலையே ஏற்படும்.புதிய அரசாங்கத்துக்கு மக்களை வாழ வைப்பதே பிரதானமாகவுள்ளது. மருந்தின்றி மக்கள் இறக்கட்டும், நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் பிரச்சினையை தீர்க்கிறோம் என்று சில கட்சிகள் கருதுகின்றனவா?
இலங்கையர் என்ற வகையில் இந்த பிரச்சினைகளை தீர்க்க அனைவரும் பங்களிக்க வேண்டும். அரசியல் லாபம் பெற முயலக்கூடாது. அனுப்பப்படும் பணத்தை துஷ்பியோகம் செய்ய இடமளிக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.