இலங்கை
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 67 பேர் சிக்கினர்! – திருமலையில் கடற்படை அதிரடி
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாட்டுக்குச் செல்வதற்கு முயற்சித்த 67 பேர் திருகோணமலையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை, சல்லி – சாம்பல் தீவில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்று இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
இரண்டு ஓட்டோக்களும், கப் வாகனம் ஒன்றும் சந்தேகநபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வாகனங்களில் பயணித்த 12 ஆண்கள் கைதுசெய்யப்பட்டதுடன், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் சட்டவிரோதமாக நாட்டிலிருந்து செல்வதற்குப் படகில் தயாராகவிருந்தவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஆட்கடத்தலில் ஈடுபடும் 5 சந்தேகநபர்களும் இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது.
வௌிநாட்டுக்குச் செல்வதற்கு தயாராகவிருந்த 45 ஆண்களும், 7 பெண்களும், சிறு பிள்ளைகள் மூவரும் குறித்த படகில் இருந்துள்ளனர்.
யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், அம்பாறை, இரத்தினபுரி, கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டுள்ளவர்களை நிலாவௌி மற்றும் உப்புவௌி பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இலங்கைக் கடற்படை மேலும் குறிப்பிட்டுள்ளது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login