அரசியல்
அரசியல் சாசன சீர்திருத்தம்! – தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்கிறார் ஸ்ரீகாந்தா


அரசியல் சாசன சீர்திருத்தத்திற்கான நடவடிக்கைகள் பாரிய அரசியல் முக்கியத்துத்தைப் பெறுகின்ற நிலையில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் அனைத்தும் இவ் விடயம் தொடர்பில் விரைவில் கலந்துரையாட முன்வர வேண்டும் என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் இன்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
முன்னெப்பொழுதும் இருந்திராத மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள்ளும், பிரதான சிங்கள அரசியல் அணிகளுக்கு இடையில் அதிகாரப் போட்டிகள் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கின்றன.
அத்துடன் உட்கட்சிப் பூசல்களும் மேலெழுந்து நிற்கின்றன. ஆயினும், 20வது அரசியல் சாசன திருத்தத்தின் ஊடாக இல்லாது ஒழிக்கப்பட்ட 19வது திருத்தத்திற்கு மீண்டும் உயிர் கொடுப்பதற்காக, 21வது திருத்தம் என்பது, பரந்துபட்ட அரசியற் கருத்தொற்றுமையுடன் முன்மொழியப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஆட்சிமுறையை நீக்கி முழுமையான பாராளுமன்ற ஆட்சி முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதிலும் கருத்தொற்றுமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று பாராளுமன்றத்தின் முன் உள்ள நிலையில், அதன் தலைவிதி எப்படி அமையும் என்று திட்டவட்டமான எதிர்வு எதனையும் இப்போது கூற முடியாது. என்றாலும், ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதற்கான பாராளுமன்ற அங்கீகாரம் சமீப எதிர்காலத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியும்.
அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்றான ஜனாதிபதி ஆட்சி முறையை நீக்குவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றிலும் சம்மதம் பெறப்பட வேண்டும் என்பதால், இந்த அரசியல் சாசன சீர்திருத்தத்திற்கான நடவடிக்கைகள் பாரிய அரசியல் முக்கியத்துத்தைப் பெறுகின்றன.
இந்த சூழ்நிலையில், நாட்டின் தொடர் பிரச்சினையான இனநெருக்கடி விவகாரத்தில், சமஷ்டி என்று அழைக்கப்படும் இணைப்பாட்சி முறையை அரசியற் தீர்வாக முன்வைத்து வந்திருக்கும் தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு நின்று, இந்த அரசியற் சீர்திருத்த நடவடிக்கைகளை கையாள வேண்டிய பெரும் பொறுப்பைக் கொண்டுள்ளன.
ஜனாதிபதி ஆட்சிமுறை அகற்றப்படும் அதே நேரத்தில், இந்த நாட்டில் இனரீதியான மோதல்களுக்கும் தொடர் அழிவுகளுக்கும் பொருளாதார பின்னடைவுகளுக்கும் அடிப்படையாக அமைந்த ஒற்றையாட்சி முறையும் நீக்கப்பட வேண்டும் என்பதை தமிழ்த் தேசியம் சார்ந்த அரசியற் கட்சிகள் அனைத்தும் ஒரே குரலில் வலியுறுத்த முன்வர வேண்டும்.
ஒற்றையாட்சி மீதான சிங்கள மக்களின் உளவியல் ரீதியான பிடிவாதப் பற்று என்பது, அரசியல் தீர்வு விவகாரத்தில் ஓர் மாபெரும் தடையாக இருந்து வந்துள்ளது என்ற போதிலும், இன்றைய சூழ்நிலையில் தமிழர் தரப்பு தனது நியாயமான கோரிக்கையை முன் வைக்கத் தவறினால் அல்லது தயங்கினால், அது ஓர் வரலாற்றுத் தவறாகி விடும் என்பதை நாம் அழுத்திக் கூற விரும்புகின்றோம்.
எனவேதான், தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகள் அனைத்தும் இவ் விடயம் தொடர்பில் விரைவில் கலந்துரையாட முன்வர வேண்டும் என எமது கட்சி பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றது – என்றுள்ளது.
- Yoft recdedygebs="mvp-author-i4 சྍरன்றாago