இலங்கை
பொதுப் போக்குவரத்துச் சேவைகள் வழமைக்கு!


நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று அதிகாலை 5 மணியளவில் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், பொதுப் போக்குவரத்துச் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில், இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்கள் சேவையில் ஈடுபட்டுள்ளன.
இதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், எரிபொருள் நெருக்கடி காரணமாக சேவையில் இணைக்கப்பட்டுள்ள பஸ்களின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, அலுவலக மற்றும் ஏனைய ரயில் சேவைகள் வழமையான நேர அட்டவணையின்படி இயங்குகின்றன என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை 12 ரயில்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என்று ரயில்வே திணைக்களத்தின் போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
ஊரடங்குச் சட்டத்துடன், ஊழியர்களைப் பணிக்கு அழைப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாக சில ரயில்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என்று அவர் மேலும் கூறியுள்ளார்.