அரசியல்
கோட்டாவுக்கு எதிரான பிரேரணை: விவாத முயற்சி தோற்கடிப்பு!


நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளை இடைநிறுத்தி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சி ஆளுங்கட்சியால் தோற்கடிக்கப்பட்டது.
ஜனாதிபதிக்கு அதிருப்தி தெரிவிக்கும் பிரேரணையை இன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்குக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தாலும் அதற்கு ஆளுங்கட்சி எதிர்ப்பை வெளியிட்டது.
ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணையை விவாதத்துக்கு எடுப்பதற்காக, நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளை இடைநிறுத்தும் யோசனையை எதிரணியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. எம்.ஏ. சுமந்திரன் முன்வைத்தார். அதனை ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல வழிமொழிந்தார்.
இந்த யோசனைக்கு ஆளுங்கட்சி உடன்படவில்லை. நிலையியல் கட்டளைகளை இடைநிறுத்துவது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தினார். இதையடுத்து சுமந்திரனின் யோசனை மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது நிலையியல் கட்டளையை இடைநிறுத்த ஆதரவாக 68 வாக்குகளும், எதிராக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
வாக்கெடுப்பில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றதால் ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை விவாதத்துக்கு வரவில்லை.