அரசியல்

ரணிலுக்குச் சாணக்கியன் சாட்டையடி!

Published

on

“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முஸம்மில் ஆகியோர் இன்று காலை நாடாளுமன்ற அமர்வின்போது எனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் கலந்துகொண்ட அவர் உரையாற்றும்போது மேலும் கூறுகையில்,

“இன்றைய தினம் காலை நான் நாடாளுமன்ற அமர்வில் இல்லாதபோது எனது பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஸம்மில் ஆகியோர் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அத்துடன் என் மீது குற்றச்சாட்டுகளையும் அடுக்கியுள்ளனர்.

இதனை நான் பின்னரே அறிந்துகொண்டேன். இருப்பினும் இவ்விடயத்தைத் தெளிவுபடுத்த வேண்டியவனாக இருக்கின்றேன்.

நான் இதற்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக இருந்திருக்கிறேன். இதை நான் மறுக்கவில்லை.

கொலைகார தரப்பினருடன் இருந்ததற்கு மனம் வருந்துவதாக நான் நாடாளுமன்றத்தில் கூறியிருக்கின்றேன். இதைப்பற்றி ரணில் விக்கிரமசிங்க பெரிதாகக் கூற வேண்டிய அவசியம் இல்லை.

எனினும், நான் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒன்றைக் கூறிவைக்க விரும்புகின்றேன். அர்ஜுன மகேந்திரன் தொடர்பில் உங்களது நடவடிக்கை என்ன? இதற்கு உங்களிடம் இருக்கும் பதில்தான் என்ன? அது பற்றி தெளிவுபடுத்த வேண்டும். அது மாத்திரமன்றி நாடு இன்று பொருளாதார நிலையில் பாரிய பின்னடைவைச் சந்தித்து இருப்பதற்கு ரணில் விக்ரமசிங்கவும் பதில் கூறவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

அடுத்ததாக தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஸம்மில் என் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவர் என் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு எந்தவிதமான அருகதையும் கிடையாது.

நான் நாடாளுமன்றத்துக்குப் புதிதாக வந்திருப்பதாகவும் எனக்கு நாடாளுமன்ற சம்பிரதாயங்கள் தெரியாது என்றும் அவர் கூறியிருக்கின்றார்.

தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஸம்மில் பின் கதவால் நாடாளுமன்றத்துக்குள் வந்தவர். ஆனால், நான் அப்படி வரவில்லை.

தேசிய சுதந்திர முன்னணியிடம் நேர்மை தன்மை இருந்திருந்தால் நேற்று இடம்பெற்ற வாக்களிப்பின்போது தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச நாடாளுமன்றத்துக்கு வருகை தந்து வாக்களித்து இருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யாது அவர் ஒளிந்துகொண்டுள்ளார்.

ஆகவே, தங்கள் மீதான குறைபாடுகளை மறைத்து வைத்துவிட்டு அடுத்தவர் மீது சேறு பூசுவதற்கு முனைய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றேன்” – என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version