அரசியல்
நாடாளுமன்றம் முன் ஆர்ப்பாட்டம்! – 12 பேர் கைது
நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகே எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த இளைஞர், யுவதிகள் சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 10 ஆண்களும், 2 பெண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை – பொல்துவை சந்தியில் நாடாளுமன்ற வளாக நுழைவாயில் வீதியை இடைமறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர – கோட்டே நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழையும் பொல்துவ சந்தியிலிருந்து நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு செல்லும் பிரதான வீதி இன்று காலை வீதித்தடைகளால் மறிக்கப்பட்டிருந்த நிலையில் அவ்விடத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை நாடாளுமன்றத்துக்குள் பிரவேசித்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நாடாளுமன்றத்துக்குப் பின்னாலுள்ள மாதிவெல நுழைவாயிலைப் பயன்படுத்தினர்.
அப்பகுதியிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்த போதிலும் நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பதாகைகளை ஏந்தியவாறு சிறிய எண்ணிக்கையிலானோர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
அத்துடன், பத்தரமுல்லை தியத்த உயனக்கு அருகில் பொல்துவ சந்தியில் இருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், அவ்விடத்தைக் கடந்து சென்ற அமைச்சர்கள் மற்றும் நாடாமன்ற உறுப்பினர்களுக்குப் பதாகைகளை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவ்விடத்துக்கு வந்த கலகமடக்கும் பொலிஸ் குழுவினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றது.
தாம் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைத் தவிர வேறு எந்தச் செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவருடனான குழுவினர், ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைதுசெய்ய முயன்ற வேளையில் அமைதியின்மை ஏற்பட்டது.
கைதுசெய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் 12 பேர் பொலிஸ் பஸ்ஸில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login