இலங்கை
வவுனியாவில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்! – மூவர் கைது
வவுனியாவில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் உட்பட மூவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை வவுனியா – வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக வவுனியாவைச் சேர்ந்த இரு ஊடகவியலாளர்கள் சென்றுள்ளனர்.
இதன்போது அதிகமான பொதுமக்கள் வரிசையில் நின்றமையால் அந்த நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கு ஊடகவியலாளர்களால் சில ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதையடுத்து எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையில் இருந்த ஊழியர்களுக்கும் அவர்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது.
கருத்து முரண்பாடு முற்றிய நிலையில் தாம் ஊடகவியலாளர்கள் என ஊழியர்களிடம் அவர்கள் அறிமுகம் செய்துவைத்தனர். அதனைப் பொருட்படுத்தாத ஊழியர்கள் “கடந்தமுறையும் எமது நிரப்பு நிலையம் தொடர்பான செய்தியை நீதானே பிரசுரித்தாய்?” எனக் கூறி கடுமையாக தாக்கியுள்ளனர். குறித்த சம்பவத்தில் ஊழியர்களுடன் இணைந்து நிரப்பு நிலையத்தின் முகாமையாளரும் தாக்கியிருந்தார்.
அத்துடன் அவர்களது மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டு அடித்துத் துரத்தப்பட்டனர். சம்பவத்தில் காயமடைந்த ஊடகவியலாளர் ஒருவர் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாகப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற நெளுக்குளம் பொலிஸார் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளர் உட்பட மூன்று பேரைக் கைதுசெய்துள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் இரகசிய கமராப் பதிவுகளை வழங்குமாறு ஏனைய ஊடகவியலாளர்களால் அதன் நிர்வாகிக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், மின்சாரம் இல்லை என்பதால் இரகசிய கமரா இயங்கவில்லை என அவர்களால் தெரிவிக்கப்பட்டது.
நாட்டில் எரிபொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பபட்டுள்ள நிலையில் வவுனியாவில் அமைந்துள்ள பிரதான நிரப்பு நிலையங்களில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் பொதுமக்களுக்கும், நிரப்பு நிலையத்தின் ஊழிர்களுக்கும் இடையில் தொடர்ச்சியாக முரண்பாடுகள் ஏற்ப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login