அரசியல்
20 இற்கு முடிவுகட்டியே தீருவோம்! – சஜித் சூளுரை
அரசமைப்பின் 20ஆவது திருத்தம் மாற்றப்பட்டு 21ஆவது திருத்தம் கொண்டு வரப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அரசுக்கு எதிராக இரு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளும், ஒரு குற்றப் பிரேரணை தீர்மானமும் கொண்டுவரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவருக்கும் தொழிற்சங்கத் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள தனியார் ஹோட்டலில் ஒன்றில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டுக்குப் பாதகமான பிரேரணைகள் வரும் போதெல்லாம் அவற்றைத் தோற்கடிக்க ஐக்கிய மக்கள் சக்தி பாடுபட்டது.
அரசு 20 ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தபோது அதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி பாரிய போராட்டத்தை முன்னெடுத்தது.
ஊழியர் சேமலாப நிதியத்தில் கைவைக்க அரசு நடவடிக்கை எடுத்தபோது அதை முறியடிக்க சட்ட ரீதியான நீதிமன்ற நடவடிக்கைகளைக் கூட மேற்கொண்டு அதனை தோற்கடிக்க நடவடிக்கை மேற்கொண்டது.
மேலும் பிற வேறு சந்தர்ப்பங்களில் நாட்டுக்காக வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கும் முகமாக ஐக்கிய மக்கள் சக்தி அர்ப்பணிப்புடன் செயற்பட்டது.
இத்தருணத்திலும் கூட வீதியில் இறங்கிப் போராடும் மக்களின் இதயத் துடிப்பாக ஐக்கிய மக்கள் சக்தி திகழ்ந்து நாட்டுக்கு வெற்றிகளைப் பெற்றுக்கொடுப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கு உறுதியாக இருக்கின்றது” – என்றார்.
தற்போதைய சமகால அரசியல் நெருக்கடி மற்றும் இது தொடர்பான ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்கால நடவடிக்கை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login