அரசியல்
இராஜிநாமா செய்யமாட்டேன்! – ஜனாதிபதி சண்டித்தனம்
“நான் ஒருபோதும் பதவியிலிருந்து இராஜிநாமா செய்யமாட்டேன். ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் எனது பதவியில் தொடர்ந்து நீடிப்பேன்.”
– இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.
‘கோட்டா வீட்டுக்குப் போ’ என்ற கோஷத்துடன் ஜனாதிபதிக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் நாடெங்கும் வலுப்பெற்றுள்ளன. இந்நிலையில், இந்தப் போராட்டங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், எனக்கு எதிராக உள்நாட்டு, வெளிநாட்டுச் சக்திகளால் களமிறக்கப்பட்ட சஜித் பிரேமதாஸ மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரைத் தோற்கடித்து 69 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் ஆணையுடன் நான் ஆட்சிப்பீடம் ஏறினேன்.
ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் ஐந்தாண்டு கால பதவிக் காலம் நிறைவடையும் வரை நான் பதவியில் தொடர்ந்து நீடிப்பேன்.
நாடாளுமன்றத்திலும் எனக்கு எதிராக மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் பிரேரணை கொண்டுவருவதற்குரிய பலம் எதிர்க்கட்சிகளிடம் இல்லை.
அன்று எனக்கு எதிராகக் களமிறக்கப்பட்ட இருவரும் (சஜித் பிரேமதாஸ, அநுரகுமார திஸாநாயக்க) இன்று எனக்கு எதிரான போராட்டங்களை நடத்துகின்றனர். அவர்களின் கட்சிகளின் பிரதிநிதிகளும், ஆதரவாளர்களுமே எனக்கு எதிராக வீதிகளில் பொங்குகின்றனர்.
‘கோட்டா வீட்டுக்குப் போ’ என்ற கோஷத்துடன் எனக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் எதிர்க்கட்சிகளின் அரசியலே உண்டு என்பதை நாடாளுமன்றத்தில் இந்த வாரம் எதிரணியினர் நடத்திய போராட்டங்களும் பகிரங்கப்படுத்தியுள்ளன.
எனவே, நாட்டில் எனக்கு எதிராக நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் உண்மையில் மக்கள் போராட்டங்கள் அல்ல” – என்றார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login