இலங்கை
கடும் பொருளாதார நெருக்கடியால் இலங்கையர்கள் தமிழகத்துக்குப் படையெடுப்பு!
இலங்கையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கடுமையான பொருளாதார சிக்கல் ஏற்பட்டு மக்கள் அத்தியாவசியப்பொருள்களை வாங்க முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், இலங்கையின் கடுமையான பொருளாதார நெருக்கடியைத் தாக்கு பிடிக்க முடியாமல் பெரும்பாலான இலங்கையர்கள் அகதிகளாக தமிழகத்துக்குப் படையெடுத்துச் செல்லும் சூழல் உருவாகி வருகின்றது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே 13 மணல் தீடைகள் உள்ளன. இதில் இந்தியாவுக்குச் சொந்தமான 6 தீடைகளும், இலங்கைக்குச் சொந்தமான 7 தீடைகளும் உள்ளன. இந்நிலையில், தனுஷ்கோடிக்கு அடுத்த மூன்றாம் மணல் தீடை பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக ஓர் ஆண், இரு பெண்கள் மற்றும் ஒரு கை குழந்தை உட்பட 3 குழந்தைககள் என 6 பேர் நிற்கின்றனர் என்று கியூ பிரிவு பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து கியூ பிரிவுப் பொலிஸார், இந்தியக் கடலோர காவல் படைக்குத் தகவல் கொடுத்ததையடுத்து கடலோர காவல் படையினர் அவர்களைக் கைதுசெய்து விசாரணை நடத்தியதில் முதல் கட்டமாக இலங்கை தலைமன்னார் பகுதியில் இருந்து அகதிகளாக தமிழகத்துக்கு வந்தமை தெரியவந்துள்ளது.
இதையடுத்து 6 பேரையும் இந்தியக் கடலோர காவல் படைக்குச் சொந்தமான கப்பலில் ஏற்றி மண்டபம் கடலோர காவல் படை அலுவலகத்துக்கு விசாரணைக்காக அனுப்பப்பட்டுள்ளனர். விசாரணைகளின் பின்னர் அவர்கள் மரைன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
இலங்கையில் இருந்து தமிழகம் வந்த அகதிகள் தரும் உறுதியான தகவல்களை அடுத்து அவர்களை இலங்கை அகதிகள் முகாமில் வைப்பார்களா அல்லது சிறைக்குக் கொண்டு செல்வார்களா என்பது முழு விசாரணைக்குப் பின்னர் தெரியவரும்.
மேலும், தற்போது சென்றுள்ள 6 பேர் அகதிகளாக எதற்கு வந்தார்கள் என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றது. மேலும், இது போன்று இலங்கையில் இருந்து அகதிகளாக ஏராளமானோர் தமிழகத்துக்குச் செல்லத் தயாராக இருக்கின்றனர் என்று விசாரணையில் தெரியவருகின்றது.
இதையடுத்து இலங்கையில் இருந்து அகதிகளாக அதிகமானோர் தமிழகத்துக்குச் செல்ல வாய்ப்புள்ளது எனக் கிடைத்த தகவலை அடுத்து இந்தியக் கடலோர காவல் படை, கியூ பிரிவு, மரைன் பொலிஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login