செய்திகள்
சஜித் அணியின் அதிரடி வியூகத்தால் திணறுகின்றது கோட்டா அரசு!
சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்தி ஆளும் தரப்புக்கு நல்ல பேதிதான் கொடுத்திருக்கின்றது போலும். கலங்கிப்போய் நிற்கின்றது பாதுகாப்புத் தரப்பு. தலையைப் பிய்த்துக்கொள்ளாத குறைதான் போங்கள்.
ஆங்கிலத்தில் ஒரு முதுமொழி உண்டு. Keep cards close to the chest என்பார்கள். விளையாடும் சீட்டுகளை நெஞ்சுக்கு நெருக்கமாக வைத்திருத்தல் என்று அதற்கு அர்த்தம். அதாவது உங்களிடம் இருக்கும் சீட்டை எதிர்த்தரப்பு அறியமுடியாத வகையில் வைத்து விளையாடுவது என்பது இதன் கருத்து.
அப்படி ஒரு நகர்வை முன்னெடுத்திருக்கின்றது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி.
எக்கச்சக்கமாக பொருள்கள் விலை உயர்ந்தமை, எரிவாயுத் தட்டுப்பாடு, மின்வெட்டு, பணவீக்கம் என்று பல்வேறு பிரச்சினைகளால் ஆடிப் போயிருக்கின்றது நாடு. ஆளும் தரப்புக்கு எதிராக மக்கள் சீற்றம் குமுறி எழும் கட்டம்.
இந்தச் சமயம் பார்த்து அரசுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சியை வெளிப்படுத்தும் விதத்தில் இன்று தலைநகரில் ஜனசமுத்திரத்தைத் திரட்டுகின்றது ஐக்கிய மக்கள் சக்தி.
ஆனால், இந்தப் போராட்டத்தை அக்கட்சி எங்கு நடத்தப்போகின்றது, எங்கு மக்களை ஒன்று திரட்டப்போகின்றது என்பதை வெளிப்படுத்தாமல் – தனது சீட்டுக்களை வெளியே தெரிய அனுமதிக்காமல் நெஞ்சுக்கு நெருக்கமாக வைத்து விளையாடுவது போல் காய்நகர்த்துகின்றது ஐக்கிய மக்கள் சக்தி.
காலி முகத்திடலிலா? பாதுகாப்பு அமைச்சு – ஜனாதிபதி செயலகம் போன்றவற்றுக்கு முன்பாகவா? அலரி மாளிகைக்குப் பக்கத்திலா? அல்லது ஜனாதிபதியின் மிரிஹான இல்லத்துக்கு அருகிலா? அல்லது பிரதமரின் விஜேராமமாவத்தை வீட்டு முன்றிலிலா? அல்லது ஜெயவர்த்தனபுரவில் நாடாளுமன்றுக்குப் பக்கத்திலா? அல்லது புறக்கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாகவா? அல்லது மத்திய வங்கி அலலது நிதி அமைச்சு அலுவலகத்தை மறித்தா? எங்கு என்று தெரியாது அல்லாடுகின்றது பாதுகாப்புத் தரப்பு.
இடம் தெரிந்தால் அதை வைத்து குறைந்தபட்சம் ஒரு நீதிமன்றத் தடை உத்தரவையாவது பெறலாம் என்றால் அதற்கும் அக்கட்சி இடமளிப்பதாகவில்லை.
அரசின் மீது சீற்றத்தில் இருக்கும் மக்களை இன்று கொழும்பில் ஒன்று கூடுமாறு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.
அரசின் மீது கடும் சீற்றத்தில் இருக்கும் மக்கள் தம்பாட்டிலேயே கொழும்பில் பல்லாயிரக்கணக்கில் திரள்வர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சில சமயங்களில் அந்த எண்ணிக்கை இலட்சங்களைத் தாண்டக் கூடும்.
இவ்வளவு பேரை ஒரே சமயத்தில் எதிர்கொள்வதாயின் பொலிஸ் தடுப்புகள், தண்ணீர் பீய்ச்சியடிக்கும் வாகனங்கள், கண்ணீர்ப் புகைக்குண்டு வீசக்கூடிய படைத்தரப்பினர் மற்றும் பல்லாயிரம் பொலிஸார், படையினர் என்று ஆளணி, அம்பு தேவை.
இவ்வளவு தளபாடங்களையும் ஆளணியினரையும் கொழும்பில் எங்கு ஒன்றுதிரட்டுவது, எங்கு நிறுத்துவது என்று படைத்தரப்புக்கு பெரும் சிக்கல்.
கொழும்பில் மக்களை ஆங்காங்கே ஒன்றுதிரட்டி விட்டு, கடைசி நேரத்தில் போராட்டக்களத்துக்கு அவர்களை ஒன்றுகூட்டுவதன் எதிரணியின் திட்டம் போலும்.
எடுத்ததற்கெல்லாம் நீதிமன்றத்திடம் ஓடி தடை உத்தரவு வாங்கும் பொலிஸாரை இப்படி நாலாபுறமும் அலையவிடும் விதத்தில் கையாள்வதுதான் சரியாக இருக்கும்.
ஒரு பக்கம் திரும்புவது போல் ‘சிக்னல்’ போட்டு விட்டு, எதிர்ப்புறம் திரும்பும் தந்திரம் போல் காலையில் ஓரிடம் என்று அறிவித்து, பிற்பகலில் இன்னொரு இடத்துக்குப் போராட்டத்தை நகர்த்தி, பாதுகாப்புத் தரப்புக்கு உச்சுக் காட்டும் விளையாட்டுக் கூட நடக்கலாம்.
ஜனாதிபதி கோட்டாபயவின் ஆளும் பக்கத்தில் ஆரவாரம் காட்டும் சில தரப்புகள் கடந்த இரு வாரங்களாக அதிக சத்தம் காட்டாமல் – அமைதி காப்பது குறித்தும் சில வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
கோட்டாவின் பின்புலத்தில் அரசியல் செய்ய முயன்ற முன்னாள் – இந்நாள் சீருடைத் தரப்புகள் யாவும் கூட இப்போது அமுக்கித்தான் வாசிக்கின்றன.
மக்கள் செல்வாக்கு குறைந்து செல்லுவது வெளிப்படையானால், செத்த நாயிலிருந்து உண்ணி கழருவது போல் இந்த ஒட்டுண்ணிகள் மெல்லக் கழன்றுவிடும்.
– மின்னல் (‘காலைக்கதிர்’ – ‘இனி இது இரகசியம் அல்ல’ – 15.03.2022)
You must be logged in to post a comment Login