கட்டுரை
பேச்சு மேசையைச் சரிவரப் பயன்படுத்துவோம்! – பகிஷ்கரிப்பது முட்டாள்தனம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேச்சு நடத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இப்போது விடுத்துள்ள அழைப்பை ஏற்பது சர்வதேசப் பொறியில் இருந்து அவரை மீட்கும் நடவடிக்கையாகிவிடும் என்று ‘மகா கண்டுபிடிப்பு’ ஒன்றைக் கண்டறிந்து, மகா புத்திசாலியாக நடப்பதாக நினைத்துக்கொண்டு, அந்தச் சந்திப்பைப் பகிஷ்கரிக்கும் அறிவிப்பை விடுத்திருக்கின்றது ரெலோ.
அந்த அழைப்பை தமிழர் தரப்பு புறக்கணிப்பதுதான் உண்மையில் ராஜபக்சக்களின் பெளத்த, சிங்கள பெரும்பான்மை தேசியவாதத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதாக போய்விடும். அதுதான் உண்மையில் யதார்த்த நிலையாகும்.
தமிழர் தேசத்துக்குத் தீர்வே தராமல் இழுத்தடிப்பதும், தமிழர் தாயகப் பகுதிகளைத் தனது பேரினவாத ஆட்சியின் மூலம் – அதிகாரத்தின் வாயிலாக – பெளத்த சிங்கள மயப்படுத்தி, தமிழர் தேசம் என்ற ஒன்றே இல்லாமல் நிர்மூலமாக்குவதே ராஜபக்ச அரசின் திட்டம் என்பது தெளிவானது; வெளிப்படையானது. அதற்கு இன்னும் கால அவகாசம் வேண்டிப் பார்த்து, காத்து இருக்கின்றது அது.
தமிழருக்கு நீதி செய்யப்படவேண்டும் என்பது தொடர்பில் ராஜபக்சக்களுக்கு சர்வதேச அழுத்தம் உண்டு. அதில் சந்தேகமில்லை. ஆனால், அந்த அழுத்தம், இலங்கையின் கழுத்தைப் பிடித்து நெட்டித் தள்ளி, அழுத்தி, ஒரே கணத்தில் அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்தில் தமிழருக்குத் தீர்வு ஒன்றை வழங்கு என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாக அது அமையவில்லை. அதுதான் யதார்த்த நிலைமை.
தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற தங்களின் வலுவான இராணுவக் கட்டமைப்பு நிலையோடு இருந்த காலத்தில் கூட, தமிழர் தரப்போடு பேசி தீர்வை வழங்குங்கள் என்றுதான் சர்வதேசம் சிங்களத்தை வழிப்படுத்தி வந்தது. இப்போதும் அதைத்தான் சர்வதேசம் சொல்லுகின்றது; சிங்களத்துக்கு அழுத்தம் கொடுக்கின்றது.
தமிழரோடு பேசித் தீர்வுக்கு வழிவகைகள் காணுங்கள் என்று சிங்களத்தின் மீது இந்தியாவும் பிற சர்வதேச நாடுகளும் கொடுக்கும் அழுத்தம் காரணமாகதான் இப்போது பேச்சு நாடகத்தை ஆரம்பித்திருக்கின்றார் கோட்டாபய ராஜபக்ச என்பதும் வெள்ளிடைமலை. அதிலும் சந்தேகம் இல்லை.
அந்தப் பேச்சு மேசைத் தளத்தை – மேடையை தமிழர் தரப்பு தந்திரோபாயமாக, சமயோசிதமாக, சாணக்கியமாகக் கையாள்வதில்தான் விவகாரமே உள்ளது.
ரெலோ கூறும் காரணங்களை ஒரு பொருட்டாக முன்வைத்து, ரெலோவைப் போல பேச்சு அழைப்பைப் புறக்கணித்து, அதனைப் பகிஷ்கரித்தால், கோட்டாபய ராஜபக்ச நிர்வாகம் எதைத் தமிழர் தரப்பில் விரும்புகின்றதோ, அதை முட்டாள்தனமாகத் தமிழர்கள் தாங்களே நிறைவேற்றி கொடுத்தார்கள் என்றாகிவிடும்.
“பார்த்தீர்களா? நாங்கள் பேச்சு மேசையில் பேசித் தீர்க்க முயன்றோம். தமிழர் தரப்பு அதனைப் புறக்கணித்து விட்டது. நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்று தெரிவித்து கோட்டாபய நிர்வாகம் சர்வதேச அழுத்தத்தில் இருந்து தப்பிக்கொள்ளும். தமிழர் தேசத்தை ஆக்கிரமித்துக் கபளிகரம் பண்ண அதற்கு நேர கால வசதிகளும் கிட்டும்.
ஜனநாயக வழிமுறையிலான போராட்டங்களில் பேச்சு மேசையை – பேச்சு மேடையை சரிவரப் பயன்படுத்துவதில்தான் வெற்றி தங்கியுள்ளது.
உக்ரைனை ஆக்ரோஷமாகத் தூண்டி, ஏற்றிவிட்ட மேற்குலகம், உக்ரைன் இப்போது அடி வாங்கும்போது வெளியில் இருந்து கத்துகின்றது. அவ்வளவுதான் அது செய்யும். இலங்கை விடயத்திலும் அதுதான் பொருந்தும்.
பேச்சு மேசைக்கு இரண்டு தரப்புகளையும் கொண்டுவந்து, இணக்கமான ஒரு தீர்வைப் பேசிக் காணுங்கள் என்றுதான் சர்வதேசம் அழுத்தம் கொடுக்குமே தவிர, தீர்வு எதையும் கொழும்பிடமிருந்து பிடுங்கித் தரும் கைங்கரியத்தை அது செய்யப்போவதில்லை.
‘அழுதும் அவள்தான் பிள்ளை பெற்றாக வேண்டும்’ என்பது போல் எங்கள் பிரச்சினைக்கான தீர்வை நாங்களேதான் பெற்றாக வேண்டும். அதற்கான தரப்பான இலங்கை ஜனாதிபதியுடன் தமிழர்கள் பேசித்தானாக வேண்டும். அதைக் கண்மூடித்தனமாகப் பகிஷ்கரிப்பது முட்டாள்தனமாகும்.
– ‘காலைக்கதிர்’ ஆசிரியர் தலையங்கம் (காலைப்பதிப்பு – 13.03.2022)
You must be logged in to post a comment Login