இலங்கை
மகேசன் இருக்கும் வரை யாழிற்கு விடிவில்லை – நடனேந்திரன் ஆதங்கம்!!
யாழ் மாவட்ட அரச அதிபராக மகேசன் இருக்கும் வரை யாழ் மாவட்டத்திற்கு அபிவிருத்திகளோ மக்களுக்கு தீர்வுகளோ கிடைக்க போவதில்லை என வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் நடனேந்திரன் தெரிவித்துள்ளார்.
வலிமேற்கு பிரதேச சபையின் மாதந்த அமர்வு இன்றைய தினம் தவிசாளர் நடனேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது உறுப்பினர் ஒருவர் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்ட கிராம நிகழ்ச்சி திட்டங்களின் அங்குரார்ப்பண வைபவம் கடந்த 3ம் திகதி நடைபெற்றது.
இதில் உள்ளுர் மக்கள் பிரதிநிதிகளை தவிர்த்து யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு ஊடாக ஒரு பட்டியல் அனுப்பப்பட்டு அப்பட்டியலுக்கு இணங்கவே நிகழ்வுகள் நடைபெற்றன .
இதற்கு யாழ் மாவட்டம் சார்பாக எந்தவொரு மக்கள் பிரதிநிதிகளையும் அழைக்கவில்லை. மாறாக கிளிநொச்சி மாவட்டத்தில் அனைத்து மக்கள் பிரதிநிதிகளின் பங்கேற்புடனேயே நிகழ்வுகள் நடைபெற்றது.
யாழ் மாவட்டத்தில் மட்டும் ஏன் எங்களை ஒதுக்குகின்றனர் என்ற கேள்வியையும் கவலையையும் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் வெளிப்படுத்தியிருந்தார்.
இதற்கு பதிலளித்த தவிசாளர் நடனேந்திரன்,
நாட்டில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும் அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்றும் நாட்டில் உண்மையான நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச இவ்வாறான பல நடைமுறைகளை முன்னெடுத்துவருகின்றார்.
அத்துடன் அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் அந்த அரசாங்கம் சரியாகவே செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது. ஆனால் யாழ் மாவட்டத்தில் மட்டும் தான் இவ்வாறான புறக்கணிப்புக்கள் நடைபெற்றுள்ளன.
இதற்கு மாவட்டத்தின் அரச அதிபரே பொறுப்புக் கூறவேண்டும். ஆனால் அவர் ஒரு அரசியல் தரப்பின் பின்னணியில் இருந்து செயற்படுவதால் அந்த அரசியல் தரப்பினரது முடிவுகளையே மக்களிடம் அரசாங்க அதிகாரிகளூடாக திணிக்கப்படுகின்றது.
இதனால் உண்மையாக தீர்க்கப்பட வேண்டிய மக்களின் தேவைப்பாடுகள் புறக்கணிக்கப்பட்டு ஒரு சிலரின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அவை நடைமுறைப்படுத்தப்படும் நிலை காணப்படுகின்றது.
அதனால்தான் குறித்த நிகழ்வுக்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் அழைக்கப்படாது புறக்கணிக்கப்பட்டனரே தவிர மாற்றுக்காரணம் இருப்பதாக தெரியவில்லை .
தற்போதைய மாவட்ட அரச அதிபர் பதவியில் இருக்கும்வரை எமது பிரதேசத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த யாழ் மாவட்ட மக்களுக்கும் நியாயமான அவிருத்திகளோ அன்றி தீர்வுகளோ கிடைக்கப்போவதில்லை
மாவட்ட அரச அதிபர் அரசியல் வாதியின் ஒருவரின் நிகழ்ச்சி நிரலுக்கு எடுபடாது தான் ஓர் அரசாங்கத்தின் பொறுப்பு மிக்க உயரதிகாரி என்ற நிலைப்பாட்டுடன் மக்களுக்கான சேவையை மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறு செயற்பட முடியாவிடின் முன்னைய அரச அதிபரைப் போன்று பதவியிலிருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
நாங்கள் இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதுவோம் எனவும் இதனை ஒரு கண்டன தீர்மானமாக நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.
#SrilankaNews
You must be logged in to post a comment Login