செய்திகள்
பயங்கரவாத சட்டத்துக்கு எதிராக கையெழுத்து போராட்டம்! – கட்சி பேதமின்றி இணையுமாறு அழைப்பு
பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பான புதிய சீர்திருத்தத்தை நாங்கள் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றோம் நாங்கள் மாத்திரமல்ல தென்னிலங்கையில் உள்ள முற்போக்கு சக்திகளும் அதனை எதிர்க்கின்றனர்.
இந்த பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்று கையெழுத்துப் போராட்டத்தை நாங்கள் ஆரம்பித்துள்ளோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரையான பேரணியின் ஒரு வருட நிறைவையொட்டி அதில் முன்வைக்கப்பட்ட பத்து அம்ச கோரிக்கைகளில் ஒன்றான பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டமொன்றை பெப்ரவரி 3ஆம் திகதி முல்லைத்தீவில் ஆரம்பித்து வைத்தோம்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபர் முன்னணி ஊடாக ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம். வடக்கிலே மீனவர் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காரணத்தினால் அதை மழுங்கடிக்ககூடாது என்று மீனவர் போராட்டம் நிறைவுபெற்ற பின்னர் அந்த கையெழுத்துப் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என்று அறிவித்திருந்தோம். மீனவர் போராட்டம் தற்போது ஒரு நிலைப்பாட்டுக்கு வந்திருக்கின்றது.
இன்று தொடக்கம் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது. தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுவில் அறிவிக்கப்பட்டு முன்னெடுக்கப்படுகின்ற ஒரு முயற்சியாக இருந்தபொழுதும் இதில் கட்சி பேதமின்றி அனைவரும் பங்கேற்க வேண்டும்.
தமிழ் மக்களை மட்டுமல்லாமல் முஸ்லிம்களையும் வெகுவாக பாதிக்கின்ற பல வருடங்களாக நடைமுறையில் உள்ள சட்டமாக இது உள்ளது. ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் முஸ்லிம் இளைஞர்கள் பலரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அது மாத்திரமல்ல முற்போக்கு சிங்கள மக்களும் இதில் பாதிக்கப்படுகின்றனர்.
கடந்த ஆட்சிக் காலத்திலேயே இந்த சட்டத்தை மாற்றுவதற்கு என்ன செய்தீர்கள் என்று சிலர் கேள்வி கேட்கின்றார்கள். கடந்த ஆட்சிக் காலத்தில்தான் பயங்கரவாத தடைச் சட்டம் முற்றாக நீக்கப்படும் என்று சர்வதேச சமூகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வாக்குறுதி கொடுக்கப்பட்டது.
அது மாத்திரமல்ல பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட்டு அதற்குப் பிரதியீடாக இன்னொரு சட்டத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வந்தமை அனைவருக்கும் தெரிந்த விடயம்.
அந்த புதிய சட்டம் வரைபு ஆரம்பத்தில் வந்த பொழுது இது பயங்கரவாத தடைச்சட்டத்தை விட கொடூரமானது.
இதற்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம் என்று முதலில் அறிவித்தது நாங்கள். அதற்குப் பிறகு எங்களுடன் கலந்தாலோசித்து மிக விசேடமாக ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து வரைபு பலவிதங்களில் மாற்றியமைக்கப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் இன்று காணப்படும் மிக மிக மோசமான பகுதிகள் அகற்றப்பட்டன.
உதாரணத்துக்கு குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நீக்கப்பட்டது. காரணமின்றி தடுப்புக்காவலில் வைத்திருக்கின்ற முறைமை நீக்கப்பட்டது. இரண்டு மாதங்களிலேயே பிணை கொடுக்கின்ற பிரிவுகள் உள்வாங்கப்பட்ட இவ்வாறு புதிய சட்டம் ஒன்று பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.
ஆனால் அது நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் அதிலுள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அவற்றை மாற்ற வேண்டும் என்றனர். குறைபாடுகள் இருந்தன – நான் இல்லை என்று கூறவில்லை.
ஒப்பீட்டளவில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விட 90 சதவீதமான குறைபாடுகள் நீக்கப்பட்டு புதிய சட்டமூலம் கொண்டுவரப்பட்டது. அதில் ஆட்சேபனை கூறிய விடயங்களை சுட்டிக்காட்டிய போது அதனை கொண்டு வந்திருந்த அப்போதைய அமைச்சர் திலக் மாரப்பன குழுநிலை விவாதத்தில் மாற்றியமைக்க முடியும் என வாக்குறுதி கொடுத்திருந்தார். அது செய்யப்படாமல் இழுத்தடிக்கப்பட்ட வேளையிலே ஈஸ்டர் குண்டு தாக்குதல் நடைபெற்றது.
அதோடு நாட்டின் நிலைமை மாறியது. சிங்கள இனவாதிகள் பயங்கரவாத தடைச்சட்டம் இல்லாவிட்டால் இவ்வாறான தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாது என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. இப்பொழுது அதை திருத்துவதாகக் கூறி சர்வதேசத்தின் காதில் பூச்சுற்றும் வேலையை அரசாங்கம் செய்கின்றது.
சீர்திருத்தம் என்ற பெயரில் ஒரு சட்ட திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளது. அதிலே எந்த சீர்திருத்தமும் கிடையாது. வெளிவிவகார அமைச்சர் மற்றும் நீதி அமைச்சரை நான் யாழ்ப்பாணத்தில் சந்தித்த போது சீர்திருத்தம் என்ற சொல்லுக்கு அகராதியில் புது வரைவிலக்கணம் தேட வேண்டியுள்ளது எனக் கூறியிருந்தேன்.
புதிய சீர்திருத்தத்தை நாங்கள் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றோம் நாங்கள் மாத்திரமல்ல தென்னிலங்கையில் உள்ள முற்போக்கு சக்திகளும் அதனை எதிர்க்கின்றனர்.
இந்த பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்று கையெழுத்துப் போராட்டத்தை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். அது இடையிலே கிடப்பில் போட்டு இருந்தாலும் இன்று முதல் முழுவீச்சில் நடைபெறும்.இதனை நாம் நாடளாவிய ரீதியில் செய்ய தீர்மானித்து இருக்கிறோம் – என்றார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login