இலங்கை
எம்மவர்களை மட்டும் திருப்பித் தாருங்கள்! – உறவுகள் கண்ணீர்
ஐ.நாவில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ்களும் நட்ட ஈடும் கொடுப்பது தொடர்பில் தெரிவித்த கூற்றை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நேற்று 1675 ஆவது நாளாக நீதி கோரி தொடர் கவனவீப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இந்த போராட்டத்தில், எமக்கு நீதி கிடைக்கும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றுள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியோ குட்டெரெஸ்டனுடன் விசேட சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.
இதில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு மரணச்சான்றிதழ்களும் நஷ்டஈட்டு தொகைகளும் கொடுப்பது எனவும் உள்ளகப் பிரச்சினைகளை உள்ளகப் பொறிமுறையூடாக தீர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது எமக்கு அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் தருகின்றது. எமது கடைசி நம்பிக்கையாக சர்வதேச நீதி பொறிமுறையே இருப்பதால் இந்த இராஜதந்திர சம்பிரதாயங்களை தாண்டி பாதிக்கப்பட்ட எமக்கு நீதி பெற்றுத்தர வேண்டும்.
இவ் விடயத்தில் ஐ.நாவின் செயலாளர் உட்பட சர்வதேச பிரதிநிதிகள் காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலை மற்றும் நீதிப் பொறிமுறை தொடர்பில் கேள்வி எழுப்பாமை எமக்கு கவலையைத் தருகின்றது.
2009ஆம் ஆண்டு இறுதிப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்து பாதுகாப்புத் தரப்பினரிடம் எமது உறவுகள் சரணடைந்தனர். பாதுகாப்புத் தரப்பினரதும் அரசின் உறுதிமொழிகளையும் நம்பி எம் உறவுகளை ஒப்படைத்தோம். இது எமது கண்கண்ட சாட்சி.
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தாலோ அல்லது தொடர்பைப் பேணினாலோ எம்மிடம் சரணடையுங்கள். நாம் புனர்வாழ்வளித்து மீண்டும் உங்களிடம் ஒப்படைப்போம் என உறுதியளித்தனர். நாம் உறவுகளை உயிருடனேயே ஒப்படைத்தோம். எனவே அவர்களும் புனர்வாழ்வளித்து ஒப்படைத்திருக்க வேண்டும்.
மாறாக அவர்களுக்கு மரணச்சான்றிதழ்களும் நட்டஈடும் கொடுத்து எம்மவர்களை எம்மிடமிருந்து பறித்தமையானது புத்ததர்மத்துக்கே ஏற்புடையதா?
இலங்கையில் தமிழர்களுக்கு நீதி கிடைப்பதானது அரிதிலும் அரிது. இந்த நிலையில் உள்ளகப் பொறிமுறையூடாக எவ்வாறு நீதி வழங்கப்படும்?
எமக்கு மரணச் சான்றிதழ்களும் வேண்டாம், இழப்பீடும் வேண்டாம் திருப்பித் தருவோம் எனக் கூறி பொறுப்பேற்ற எங்கள் உறவுகள் எமக்கு வேண்டும். அதற்கான நீதியை ஐ.நா. வழங்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
You must be logged in to post a comment Login