அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து கொண்ட மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், சிறந்த தகவல் ஒன்றினை தெரிவித்துள்ளார்.
அதில், விசேட தேவையுடைய பிள்ளைகள், ஆட்டிசம் (Autism) மற்றும் ஏனைய நரம்பியல் குறைபாடுகளைக் கொண்ட பிள்ளைகள், சாதாரண முன்பள்ளிப் பிள்ளைகளுடன் இணைந்து கற்பதற்கான வாய்ப்பை வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், விசேட தேவையுடைய பிள்ளைகளைச் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தி, அவர்களுக்குத் தனித்தனியாகக் கற்பிக்கும் பழைய முறையைக் கைவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு மருத்துவ ஆலோசனைகளுடன் கூடிய செயற்பாடு சார்ந்த கல்வி முறையும், நடத்தை ரீதியான பழக்கப்படுத்துதல்களும் அத்தியாவசியமானவை எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், அதற்கு அப்பிள்ளைகளைத் தனிமைப்படுத்தாமல் சாதாரண பிள்ளைகளுக்கு மத்தியிலேயே அவர்கள் வளர்வதற்கும் வாய்ப்பளிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தினையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிலையாக, விசேட தேவையுடைய பிள்ளைகளைக் கையாளும் விதம் குறித்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வூட்டும் மற்றும் பயிற்சி அளிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அது மாத்திரம் அல்லாமல் விசேட தேவையினை கொண்ட பிள்ளைகளும் பெற்றோர்களும் எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும் அவர் கருத்துக்களினை முன்வைத்துள்ளார்.